IPL Auction: ரூ.30 லட்சம் டு 6 கோடி! - ஆர்சிபி போட்டி போட்டு வாங்கிய ராஷிக் சலாம...
5 டன் போதைப்பொருள்கள் பறிமுதல்: 6 நபர்கள் கைது!
அந்தமானில் 5 டன் அளவிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் 6 நபர்களைக் கைது செய்துள்ளனர்.
அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படை டோர்னியர் விமானத்தின் விமானி நவம்பர் 23 அன்று, வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போர்ட் பிளேர் பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரென் தீவின் அருகே ஒரு மீன்பிடி படகு சந்தேகத்திற்கிடமாக இருப்பதை கவனித்தார்.
பின்னர், அந்தப் படகின் வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்த விமானி அந்தமான் நிக்கோபார் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தப் படகில் மியான்மரைச் சேர்ந்த 6 பேர் இருந்துள்ளனர். பின்னர், அதிகாரிகள் அங்கு விரைந்து விசாரணைக்காக நேற்று (நவ. 24) அந்தப் படகை போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு இழுத்து வந்தனர்.
விசாரணையில், அவர்கள் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை இந்தியா மற்றும் அருகிலிலுள்ள நாடுகளுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்!! உடல் கூறாய்வில் அதிர்ச்சி
பின்னர், மியான்மரைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3,000 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் அளவிலான போதைப் பொருள்கள் மற்றும் படகினை கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தமான் பகுதியில் பிடிபட்ட போதைப்பொருள்களில் இது மிக அதிகளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2019 மற்றும் 2022 ஆண்டுகளில், இந்திய கடல் எல்லைகளுக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டு கப்பல்களிலிருந்து இதே போன்ற போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.