சாம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!
Aus v Ind : 'ஆதிக்கம் செலுத்திய பும்ரா & கோ'- பெர்த்தில் இமாலய வெற்றி சாத்தியமானது எப்படி?
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றிருக்கிறது. 534 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்து 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய தொடரின் முதல் போட்டியிலேயே ஆதிக்கமாக ஆடி வெல்வது அத்தனை எளிதான விஷயம் இல்லை.
வெயிலின் தாக்கத்தால் பிட்ச் இன்னும் வெடிக்கத் தொடங்கி சீரற்ற பவுன்ஸ் நாளை இன்னும் வீரியமாக இருக்குமென ஸ்மித் நேற்றே பேசியிருந்தார். அதேமாதிரியே இன்றைக்கும் பிட்ச் இந்திய பௌலர்களுக்கு சாதகமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் நம்பிக்கையோடு ஆடவில்லை என ஒரு விமர்சனம் கடுமையாக முன் வைக்கப்பட்டது. அது உண்மையும் கூட. அதேமாதிரியே இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவும் துளி கூட நம்பிக்கையில்லாமல்தான் பேட்டிங் ஆடியது என்பதும் 100% உண்மைதான். இந்தியா 534 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்த போதே ஆஸ்திரேலியா பாதி தோல்வி அடைந்த மனநிலைக்கு சென்று விட்டது. நேற்றைய நாளின் கடைசி அரை மணி நேரத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த சமயத்திலேயே ஆஸ்திரேலியா தோல்வியை ஏற்க தொடங்கிவிட்டது. இடையில் நைட் வாட்ச் மேனாக கம்மின்ஸ் இறங்கியது அவர்களின் தயக்க மனநிலையை அப்படியே அப்பட்டமாக காட்டியிருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் கையில் 7 விக்கெட்டுகள் இருந்தது. இரண்டு நாளும் நின்று போட்டியை டிரா செய்ய வேண்டும் அல்லது துணிச்சலாக அடித்து ஆடி முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவின் முன் இந்த இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தது. ஆனால், இந்த இரண்டிலுமே எதை தேர்வு செய்வது என்பதில் ஆஸ்திரேலிய அணியிடம் சரியான தெளிவு இல்லை. கவாஜா அவுட் ஆன விதத்தில் இருந்தே இதை புரிந்துகொள்ள முடியும். லீவ் செய்ய வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தை வம்படியாக அரைகுறையாக அடிக்க முயன்று அவுட் ஆனார்.
கவாஜாவெல்லாம் நின்று ஆட முடிவெடுத்தாலே நாள் முழுக்க அசராமல் நிற்பார். அணிக்குள் இருந்த அயர்ச்சியும் அணுகுமுறை சார்ந்த குழப்பமுமே அவரை அப்படி ஒரு ஷாட்டுக்கு செல்ல வைத்தது. அவர் அவுட் ஆனவுடன் ஸ்மித்தும் ஹெட்டும் கொஞ்சம் நிதானமாக நின்று ஆட முற்பட்டனர். க்ரீஸூக்குள் கதகளி ஆடும் ஸ்மித் இந்த இன்னிங்ஸில் தன்னுடைய டெக்னிக்கை கொஞ்சம் மாற்றி திடகாத்திரமாக நின்று ஆடினார். ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. அவரும் சிராஜின் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். இதன்பின் ஹெட்டும் மிட்செல் மார்ஷூம் கொஞ்சம் வேகமாக ஆடி தோல்வியின் தூரத்தை குறைக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களாலும் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் இணைந்து 81 ரன்களை 14 ஓவர்களுக்குள் சேர்த்தனர். ஆனால், இவர்கள் ரிஸ்க் எடுத்து ஆடியதால் விக்கெட்டுக்கான வாய்ப்புகளும் அதிகரித்தது.
நிதிஷ் ரெட்டி மார்ஷூக்கு 4-5 ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை வீச அதில் இன்சைட் எட்ஜ் ஆகி மார்ஷ் 47 ரன்களில் வெளியேறினார். கொஞ்சம் நின்று இந்தியாவின் வெற்றியை தாமதப்படுத்திக் கொண்டிருந்த ஹெட்டை பும்ரா தனது அசாத்திய பந்துவீச்சின் மூலம் வீழ்த்தினார். ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துக்கு பேட்டை விட்டு 89 ரன்களில் ஹெட் வெளியேறினார். இதன்பிறகு, எந்த வீரராலும் நீண்ட நேரம் நின்று ஆட முடியவில்லை. வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு சிறப்பாக வீசி டெய்ல் எண்டர்களை வேகமாக வீழ்த்திக் கொடுத்தார்.
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு இது முக்கியமான வெற்றியாக இருக்கும். ஏனெனில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களின் போது முதல் டெஸ்ட் போட்டியையே இந்தியா வெல்வது அரிதான விஷயம். சமீபத்திய ரெக்கார்ட்படியே பார்த்தால் கூட கடந்த மூன்று முறையும் அடிலெய்டு, பிரிஸ்பேன், அடிலெய்டு என முதல் போட்டிகளையெல்லாம் இந்தியா தோற்றிருக்கவே செய்கிறது. கடந்த முறை அடிலெய்டில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதெல்லாம் ஜீரணிக்க முடியாத தோல்வி. அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வந்து இந்திய எடுத்து விஸ்வரூபம் தனிக்கதை.
ஆனால், முதல் போட்டியிலேயே ஆதிக்கமாக ஆடுவதை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் நாம் அதிகமாக பார்க்கவில்லை. அந்தவிதத்தில் பெர்த் வெற்றி ரொம்பவே முக்கியமானதுதான். மேலும், இந்த ஒட்டுமொத்தத் தொடருக்குமான ஊக்கத்தையுமே இந்தியா இந்தப் போட்டியிலிருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறும் முன்பு இந்தியா சொந்த மண்நில் நியூசிலாந்துக்கு எதிராக வாஷ் அவுட் ஆகியிருந்தது. ஒட்டுமொத்த இந்திய அணியின் மீதுமே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. முக்கிய தலைகளுக்கு பிசிசிஐ கடைசி எச்சரிக்கையை கொடுத்திருந்தது. கூடவே முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லை. இத்தனை அழுத்தங்களையும் கடந்து பெர்த்தில் இந்தியா இமாலய வெற்றியை நிகழ்த்தியிருப்பது மெச்சத்தகுந்ததுதான்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...