IPL Mega Auction: 'கம்பேக் அஷ்வின்; டாப் ஆர்டருக்கு திரிபாதி!' - ஏலத்தில் சென்னை எப்படி செயல்பட்டது?
ஐ.பி.எல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிந்திருக்கிறது. எல்லா அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை கொட்டி அள்ளியிருக்கின்றன. சென்னை அணியின் ஏல மேஜையும் நேற்று பரபரப்பாகவே இருந்தது. நேற்று மட்டும் 7 வீரர்களை சென்னை அணி வாங்கியிருக்கிறது. முதல் நாளில் சென்னை அணியின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதைப் பற்றிய அலசல் இங்கே.
வழக்கமாக சென்னை அணியின் ஏல முகாமை 'மிக்சர் பாய்ஸ்' என இணையதளவாசிகள் கலாய்ப்பார்கள். அந்தளவுக்கு கறாராக தங்களுக்கு தேவையான சரியான வீரர்களுக்கு மட்டுமே சென்னை அணி கையை தூக்கும். ஆனால், நேற்று சென்னை அணியின் ஏல மேஜை ரொம்பவே ஆக்டிவ்வாக இருந்தது. ஏலத்தில் முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்கின் பெயரே வாசித்தவுடனேயே சென்னைதான் முதலில் கையை தூக்கி ஏலத்தை தொடங்கி வைத்தது. முதல் இரண்டு Marquee செட்களிலும் சேர்த்து 12 வீரர்கள் இருந்தார்கள். இதில் 6 வீரர்களுக்கு சென்னை அணி கையை தூக்கி முயற்சி செய்திருந்தது.
ஷமி, சிராஜ், அர்ஷ்தீப், ராகுல் என சென்னை அணியின் விருப்பப்பட்டியல் நீண்டது. ஆனால், எல்லா வீரர்களுக்குமே ஒரு எல்லையை வைத்துக் கொண்டேதான் ப்ளெம்மிங் & கோ முயன்றது. 7-8 கோடியை பெரும்பாலான வீரர்களுக்கு தாண்டவில்லை. ராகுலுக்கு மட்டும் 12.25 கோடிக்கு மேல் ஏலம் சென்று கொண்டிருக்கையில் ஏலத்தில் இணைந்து சீக்கிரமே பின் வாங்கவும் செய்தனர்.
ஏல அரங்கில் சென்னை அணியின் முதல் இரண்டு மணி நேரம் இப்படியாகத்தான் கழிந்தது. முதல் ஆளாக கான்வேயைத்தான் சென்னை வாங்கியது. 6.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாபுடன் போட்டி போட்டு கான்வேயை வாங்கியது. சென்னையின் ஓப்பனிங் கூட்டணிக்கென ஒரு பார்முலா இருக்கிறது. ஒரு இந்திய ஓப்பனர் + வெளிநாட்டு ஓப்பனர் என்றுதான் ஓப்பனிங் கூட்டணியை கட்டமைப்பார்கள். அந்தவிதத்தில் ஹேடன், ஹஸ்ஸி, ஸ்மித், மெக்கல்லம், டூப்ளெஸ்சிஸ் வரிசையில் சென்னைக்கு கிடைத்த திடகாத்திரமான ஓப்பனர் கான்வே. அவரை அழைத்து வந்ததன் மூலம் ருத்துராஜ் - கான்வே ஓப்பனிங் கூட்டணியை சென்னை உறுதி செய்துவிட்டது. சென்னை அணியின் ஏல ஆப்பரேஷனில் 50% வெற்றி இதிலேயே கிடைத்துவிட்டது.
ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி ஆகியோரையும் எடுத்திருக்கிறார்கள். நம்பர் 3, நம்பர் 4 பொசிஷனில் இருவருக்கும் எங்கு செட் ஆகுமோ அங்கு இருவரையும் இறக்கக்கூடும். ராகுல் திரிபாதி நட்சத்திர அந்தஸ்து இல்லாத வீரர். ஆனால், அவர் ஆடுகிற அணிகளுக்கு உயிரை கொடுத்து தன்னுடைய முழுத்திறனையும் வெளிக்காட்டி நல்ல ரிசல்ட்டை கொடுப்பார். கொல்கத்தா அணியில் ஆடி வந்தார். கொல்கத்தா அணியின் அனலிஸ்ட் ஸ்ரீகாந்த் இப்போது சென்னை அணிக்கு வந்திருப்பதால் அவரின் சாய்ஸாக கூட திரிபாதி இருந்திருக்கலாம். எது எப்படியோ 3.40 கோடிக்கு திரிபாதி நல்ல தேர்வுதான்.
ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்பதால் கலீல் அஹமதுவை 4.80 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். சென்னை அணி நேற்று வாங்கிய ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் அவர் மட்டும்தான்.
அஷ்வினுக்கு 9.75 கோடி கொடுத்து மீண்டும் சென்னை அணிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். 2015 வரை சென்னை அணிக்காகத்தான் ஆடி வந்தார். இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை அணி மீண்டு வந்த போது 2018 ஏலத்தில் சென்னை அணி அஷ்வினுக்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவே இல்லை. அதன்பிறகான ஏலங்களிலும் அஷ்வினை சென்னை கண்டுகொள்ளவில்லை. இப்போது மீண்டும் சென்னை அணி அஷ்வினுக்கு 9.75 கோடி ரூபாயை கொடுத்து வாங்கியிருக்கிறது.
அஷ்வினை வாங்கியே ஆக வேண்டும் முடிவெடுத்துதான் அவருக்கு கை தூக்கினார்கள். அஷ்வினுக்கு இப்போது 38 வயதாகிறது. வேறு எந்த அணியாவது அவருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்திருந்தால் நிச்சயம் விமர்சனம் எழுந்திருக்கும். ஆனால், சேப்பாக்கத்தில் அஷ்வின் எனும் போது இவ்வளவு பெரிய தொகை நியாயமானதாகவே பார்க்கப்படுகிறது. அஷ்வின் அவருடைய கரியரை சிஎஸ்கே வோடு சிறப்பாக முடித்துக் கொள்ளவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
அஷ்வினையும் தாண்டி நூர் அஹமதுவுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அஷ்வினை போலவே இவரையும் எடுத்தே ஆக வேண்டும் எனும் முனைப்பில்தான் RTM பயன்படுத்திய குஜராத்தை அசர வைக்கும் வகையில் 10 கோடி சொல்லி வாங்கினார்கள். சென்னை இதுவரைக்கும் மணிக்கட்டு ஸ்பின்னர்களுக்கு (Wrist spinners) பெரிதாக செலவளித்ததில்லை.
கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியின் முதல் சாய்ஸாக ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் இருந்ததே இல்லை. இப்போது நூர் அஹமதுவுக்கு இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இளம் வீரர் என்பதால் சரியாக க்ளிக் ஆகும்பட்சத்தில் சென்னை அணியின் முக்கிய வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார்.
சென்னை அணி முதல் நாளில் வாங்கியிருக்கும் வீரர்களில் பெரிதாக குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. இப்போதைக்கு மொத்தமாக 12 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களை வைத்தே கூட லெவனை ஃபார்ம் செய்துவிடலாம். ஆனாலும் இரண்டாம் நாளில் சென்னை அணி கட்டாயமாக ஒரு சில வீரர்களை எடுத்தே ஆக வேண்டும். அணியில் இப்போதைக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக கலீல் அஹமதுவும் பதிரனாவும் மட்டுமே இருக்கிறார்கள். கட்டாயமாக ஒரு திடகாத்திரமான இந்திய மற்றும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சென்னை சென்றே ஆக வேண்டும்.
அப்படி சென்ற பிறகு பேக் அப்பாக மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அஷ்வின், ஜடேஜா, நூர் அஹமது ஆகியோருக்கு பேக் அப்பாக இன்னும் ஒன்றிரண்டு ஸ்பின்னர்களும் தேவைப்படுகிறார்கள். அதேமாதிரி, கொஞ்சம் அதிரடியாக ஆடக்கூடிய Uncapped பேட்டர்களையும் சென்னை குறி வைக்க வேண்டும்.
சென்னை அணி வாங்கியிருக்கும் வீரர்களைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...