Kangana Ranaut: ``பெண்களை அவமரியாதை செய்பவர்கள்..." - உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது. அதனால், எதிர்க்கட்யே இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் நிலவிவருகிறது.
இந்த நிலையில், இமாச்சல் பிரதேசத்தின் மண்டி எம்.பி-யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``உத்தவ் தாக்கரேவின் தோல்வியை நான் எதிர்பார்த்தேன். பெண்களை அவமரியாதை செய்பவர்கள் அரக்கர்கள். அவர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் தற்போது அனுபவிக்கிறார்கள். அவர் ஆட்சியில் இருக்கும்போது என் வீட்டை இடித்து, எனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை அவமானப்படுத்தினார்.
அவர்கள் எது சரி, எது தவறு என்ற உணர்வைக்கூட இழந்துவிட்டார்கள் என்பது இந்தத் தோல்வியின் மூலம் தெளிவாகத் தெரிகிறது" எனக் குறிப்பிட்டார்.
2020-ம் ஆண்டு அப்போதைய உத்தவ் தாக்கரே அரசு ஆட்சியில் இருந்தபோது, கங்கனா ரனாவத்தின் வீட்டின் ஒரு பகுதி 'சட்ட விரோதமாகவும், அங்கீகாரமில்லாமலும் கட்டப்பட்டிருக்கிறது' என்று மாநகராட்சி நிர்வாகம் இடித்தது குறிப்பிடதக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...