``ஸ்டிக்கர் ஒட்டினால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும்'' -EB பெயரில் மோசடி; வீ...
`தேடி வருவோர்க்கெல்லாம் வரன் தேடித்தரும் தலம்’ - திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில்
சொந்தத்தில் வரன் பேசி முடிப்பதில் ஆரம்பித்து, தரகர்கள், திருமண தகவல் மையங்கள், ஆன்லைன் வலைதளங்கள் என பல வசதிகள் இருந்தும்... 'இன்னும் என் பசங்களுக்கு கல்யாணம் கைகூடி வரலியே’ என்று ஏங்கும் பெற்றோர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இத்தகையோருக்கு வரன் தேடித்தரும் தலங்களில் ஒன்றாக பரிமளிக்கிறது காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தை, ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில்!
ஒரு கல்யாணம் முடிக்கவே மனிதர்கள் படாதபாடு படவேண்டியிருக்கிறது. ஆனால், இங்கே குடிகொண்டிருக்கும் எம்பெருமானோ... தினம்தோறும் ஒரு கல்யாணம் நடத்தி, அதன் காரணமாகவே நித்ய கல்யாண பெருமாள் என்று பெயரெடுத்திருக்கிறார். இப்படி நித்தமும் கல்யாணம் நடந்த தலம் என்பதால்தான், தேடி வருவோர்க்கெல்லாம் வரன் தேடித்தரும் தலமாகவும் விளங்குகிறது... இந்த திருவிடந்தை!
ஆச்சர்யம் நிறைந்திருக்கும் அந்தப் புராணத்தை அழகாக நமக்கு விவரித்தார்... கோயிலின் அர்ச்சகர், ஸ்ரீராம பட்டாச்சாரியார். ''சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்து வந்த 'குனி’ என்கிற தேவகன்னிகை, தனக்கு ஏற்பட்ட தேவகுல சாபத்தால் பூமிக்கு வருகிறார். ஒரு முனிவரைத் திருமணம் செய்துகொண்டு, 360 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் மட்டுமே விமோசனம் கிடைக்கும் என்பதுதான் சாபம். சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிந்த அத்தனை முனிவர்களிடமும் சென்று திருமணம் செய்துகொள்ளுமாறு கோரிக்கை வைத்தாள்.
'சந்நியாசி என்பவன், இல்வாழ்க்கையில் ஈடுபடுவது தர்மம் ஆகாது' என்று சொல்லி அத்தனை பேரும் மறுக்க, இறுதியாக காலவ முனிவரிடம் சென்று சாப விமோசனம் கிடைக்க அருளுமாறு மன்றாடினாள். குனியின் மீது பரிதாபம் கொண்ட காலவ முனி, அவளைத் திருமணம் செய்து கொண்டார். தினம் ஒரு பெண் குழந்தை என, மொத்தம் 360 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததன் பலனாக, சாப விமோசனம் பெற்று தேவலோகத்துக்கு திரும்பினாள் குனி.
தனக்கும் குனிக்கும் பிறந்த 360 பெண் பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார் காலவ முனி. ஆனால், அவர்களுக்கு காலாகாலத்தில் கல்யாணம் கூடிவரவில்லை. இதனால் கோயில் கோயிலாகச் சென்றார். இறுதியாக இத்திருக்கோயிலுக்கு வந்து, எம்பெருமானான வராகமூர்த்தியை தரிசித்தவர்... 'இவர்தான் என் மகள்களை திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்றவர்’ என்று முடிவெடுத்தார். அன்றிலிருந்து எம்பெருமானை மனதில் நிறுத்தி தீவிர பிரார்த்தனை செய்தார்.
விஷயத்தை அறிந்து, அவரை சோதிக்க எண்ணிய எம்பெருமான், பிராமணர் வடிவில் வந்து, 'உன் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று சொல்ல, உடனே முனிவர், 'எனக்கு மொத்தம் 360 பெண்கள்’ என்றார். அதற்கு எம்பெருமான் 'பரவாயில்லை, நானே அத்தனை பேரையும் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றார். காலவ முனியோ... 'என் முதல் பெண்ணை மணம் முடித்தவுடனேயே, தாங்கள் மணமானவராகி விடுவீர்கள். அதனால் உங்களுக்கு மறுபடியும் பெண் கொடுப்பது, தர்மம் ஆகாதே... அப்படியிருக்கும்போது எப்படி மற்ற பெண்களை உங்களுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க முடியும்?' என்று கேட்டார்.
ராகு, கேது பரிகார தலம்!
வராகப் பெருமாளின் இடப்பாகத் தில் அகிலவல்லித் தாயார் (பூமாதேவி) அமர்ந்திருக்கும் திருத்தலம் திருவிடந்தை. 108 திவ்ய தேசங்களில் 62-வது ஸ்தலமாக கருதப்படுகிறது. ராகு, கேது அம்சமான ஆதிசேஷன் தன் மனைவி வாசுகியுடன் வராக பெருமாளின் இடது காலை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் ராகு, கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
எல்லாக் கோயிலிலும் திருக்கல்யாண வைபவத்தின்போது, சுவாமிக்கு வைக்கப்படும் திருஷ்டிப் பொட்டு அபிஷேகம் செய்யும்போது கலைந்து விடும். இங்கு, பெருமாள் தினமும் திருமணக் கோலத்தில் இருப்பதால்... அவருக்கு இயற்கையாகவே என்றும் அழியா திருஷ்டிப் பொட்டு ஒன்று இருப்பது விசேஷம்.
'தினமும் பிரம்மச்சாரியாக வந்து உம் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்ற எம்பெருமான், அப்படியே செய்தார். கடைசி நாள், தான் கல்யாணம் செய்து கொடுத்த பெண்களை காணவில்லையே என கருவறைக்குப் போய் பார்த்தபோது, அங்கு வராக பெருமான், 360 பெண்களையும் ஒரே உருவாக மாற்றி, உயர்த்திய தன் இடக்காலின் மீது அமர வைத்திருந்தார். பிறகு, காலவ முனிவரைப் பார்த்து 'உமக்கு என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டார். 'எனக்கு அருளிய இக்காட்சியை... வருங்காலத்தில் அனைவருக்கும் தினம்தோறும் அருள வேண்டும்' என்று சொன்னார் காலவ முனி. அதன்படியே வரமளித்த எம்பெருமான், இன்றளவும் அப்படியே காட்சி தருகிறார்!'' என்று புராணம் சொல்லி முடித்த பட்டாச்சாரியார்,
''இன்றும் தன்னிடம் திருமண வரம் வேண்டி வரும் பக்தகோடிகள் அனைவருக்கும் இப்பெருமான் அருள் புரிந்து, அவர்களது வரத்தை நிறைவேற்றுகிறார்'' என சிலிர்ப்புடன் சொன்னார்.
திருமண பரிகார முறை!
இரண்டு மாலைகளும் ஒரு அர்ச்சனைத் தட்டும் வாங்கி, அர்ச்சகரிடம் கொடுத்து, பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இரு மாலைகளில் ஒரு மாலையை பெருமாளுக்கு சாத்திவிட்டு, மற்றொரு மாலை பரிகாரம் செய்பவரிடம் கொடுக்கப்படும். தன் கழுத்தில் அதனை அணிந்துகொண்டு கோயிலை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். வீட்டுக்கு சென்ற பின்னர், பூஜை அறையில் மாலையை வைத்து, தொடர்ந்து எம்பெருமானை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேண்டியபடி திருமணம் முடிந்துவிட்டால், தம்பதி சமேதராக, கோயிலுக்கு வந்து இரண்டு மாலைகள் வாங்கி பெருமாளுக்கு சாத்திய கையோடு, வீட்டில் உள்ள பழைய மாலையை கோயிலின் தல விருட்சமான புன்னை மரத்தில் கட்டிவிட வேண்டும்.
செல்லும் வழி!
சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கிறது திருவிடந்தை. கார் மற்றும் பேருந்துகளில் பயணிக்கலாம். இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணித்தால், கோவளத்தை அடுத்து வரும் திருவிடந்தை நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
ராகு, கேது பரிகார தலம்!
வராகப் பெருமாளின் இடப்பாகத் தில் அகிலவல்லித் தாயார் (பூமாதேவி) அமர்ந்திருக்கும் திருத்தலம் திருவிடந்தை. 108 திவ்ய தேசங்களில் 62-வது ஸ்தலமாக கருதப்படுகிறது. ராகு, கேது அம்சமான ஆதிசேஷன் தன் மனைவி வாசுகியுடன் வராக பெருமாளின் இடது காலை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் ராகு, கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
எல்லாக் கோயிலிலும் திருக்கல்யாண வைபவத்தின்போது, சுவாமிக்கு வைக்கப்படும் திருஷ்டிப் பொட்டு அபிஷேகம் செய்யும்போது கலைந்து விடும். இங்கு, பெருமாள் தினமும் திருமணக் கோலத்தில் இருப்பதால்... அவருக்கு இயற்கையாகவே என்றும் அழியா திருஷ்டிப் பொட்டு ஒன்று இருப்பது விசேஷம்.
கட்டுரை: இந்துலேகா.சி