துதிக்கையில் முத்தம்; செல்போனில் செல்ஃபி - திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியது எப்படி?
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது தெய்வானைக்கு வயது 26. திருக்கோயில் ராஜகோபுரம் பகுதியில் தங்குவதற்கு குடில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை பாகர்களாக ராதாகிருஷ்ணன், அவரது சகோதரர் சதாசிவம் நாயரின் மகன்கள் செந்தில்குமார், உதயகுமார் ஆகியோர் பணியில் உள்ளனர்.
தெய்வானை யானை, தினமும் காலை, மாலை கோயில் வளாகத்தைச் சுற்றியும், தங்கத்தேர் உலா மற்றும் முக்கிய திருவிழாக்களின் போது உலா வருவது வழக்கம். அந்த நேரத்தில் பக்தர்கள் யானைக்கு பழம் கொடுத்து ஆசி பெறுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோல் நோயால் பாதிக்கபப்ட்டதால், பக்தர்கள் யானைக்கு நேரடியாக பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நேரடியாக வழங்க தடை விதிக்கப்பட்டது. மாறாக யானை குடிலின் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் உணவுப் பொருட்களை போட்டு, அதை யானை பாகர்கள் தரம் பார்த்து யானைக்கு வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று (18-ம் தேதி) காலை வழக்கம்போல் ராதாகிருஷ்ணன், தெய்வானை யானைக்கு பகலில் உணவு வழங்கியுள்ளார். பின்னர் பணி முடிந்து மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்றுள்ளார். மாலை சுமார் 3 மணியளவில் உதவி பாகரான உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பளுகலைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரரான சிசுபாலன் என்பவரும் யானை குடிலுக்கு வந்துள்ளனர். அப்போது யானை, சிசுபாலனை துதிக்கையால் தாக்கியுள்ளது.
அவரை உதயகுமார் காப்பாற்ற முயன்றுள்ளார். அவரையும் துதிக்கையால் தாக்கியதால் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் கால்களால் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்து மயங்கினர். யானையின் ஆக்ரோஷ சத்தம் கேட்டு திரண்ட திருக்கோயில் பணியாளர்கள், மற்றொரு உதவி பாகரின் உதவியுடன் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிசுபாலன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தை பாகராக இருந்ததால் சிறுவயது முதலே யானைகளை பார்க்க வருவது வழக்கமாம். நேற்றும் அதே போல திருச்செந்தூருக்கு வந்த சிசுபாலன், குடிலுக்குச் சென்றவுடன் தெய்வானை யானையுடன் நீண்ட நேரமாக செல்ஃபி எடுத்துள்ளார். பின்னர் துதிக்கையில் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது அவரது கழுத்தை துதிக்கையால் சுற்றி வளைத்து இறுக்கியுள்ளது.
யானையின் பின்னால் நின்று கொண்டிருந்த உதவி பாகர் உதயகுமார், சிசுபாலனை மீட்கச் சென்றுள்ளார். அப்போது பின்னால் இருந்து யாரோ வருகிறார்கள் என நினைத்து அவரையும் தாக்கியுள்ளது. இதில் அவர் சுவற்றில் மோதி காயமடைந்து விழுந்த நிலையில், இருவரையும் காலால் தாக்கியுள்ளது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்த யானை, பாகரை தாக்கிவிட்டோம் என்பதை அறிந்து அவரை கட்டிப்போட்டிருந்த இடத்தில் மண்டியிட்டு எழுப்ப முயன்றுள்ளது. இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் புருஷோத்தமன், சாந்தி, குமரன் ஆகிய மூன்று யானைகள் இருந்துள்ளது. இதில், புருஷோத்தமன் மற்றும் சாந்தி வயது முதிர்வாலும், குமரன் காலில் புண் ஏற்பட்டும் உயிரிழந்த நிலையில் தற்போது தெய்வானை யானை மட்டும் உள்ளது. உயிரிழந்த உதயகுமாரின் தந்தை சதாசிவம் நாயர் மற்றும் சிசுபாலனின் தந்தை கிருஷ்ண நாயர் ஆகியோர் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்கள் திருச்செந்தூர் கோயில் யானை பாகர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
அதன் பிறகு சதாசிவம் நாயரின் மகன்கள் யானை பாகர்களாக உள்ளனர். இரண்டு தலைமுறைகளாக யானை பாகர்களாக இக்கோயில் யானைகளை பராமரித்து வந்துள்ளனர். உதவி யானை பாகர் உதயகுமார் உயிரிழந்த நிலையில் தற்போது தெய்வானை யானையை பராமரிக்க நெல்லை, நெல்லையப்பர் கோயில் யானை பாகர் ராமதாஸ் வரவழைக்கப்பட்டுள்ளார். தெய்வானை யானை குடிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யானை குடிலின் அருகில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...