வால்மார்ட் ஓவனில் இந்தியப் பெண் சடலம்: கொலை இல்லை என்கிறது கனடா காவல்துறை!
இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பெண், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரி அடுப்பில் சடலமாகக் கிடந்த வழக்கில், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கனடா காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
அக்.19ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் 19 வயதான குர்சிம்ரன் கௌர் என்ற 19 வயது பெண், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகும் நிலையில், அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்றும், விசாரணை முடிவுக்கு வந்திருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் தொடர்பு அதிகாரி மார்டின் கிரோம்வெல் கூறுகையில், என்ன நடந்திருக்கும் என்பது குறித்து ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அது தொடர்பான விசாரணைக்கு சில காலம் எடுக்கும். ஆனால், முதற்கட்ட விசாரணையில், பலரிடம் விசாரணை நடத்தியும், விடியோ காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். இன்று நாங்கள் நடத்திய விசாரணையின் நிலையை வெளியிடவிருக்கிறேன், இந்த மரணத்தில், எந்த சந்தேகமும் இல்லை. இந்தியப் பெண் மரணத்தில், வெளி நபர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவரது மரணம் சந்தேகத்துக்கு இடமான மரணம் என நாங்கள் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, இந்த வழக்கில், மக்களின் கவனமும் இருக்கிறது என்பதையும், பதில் சொல்ல முடியாத சில கேள்விகள் இருப்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்திப் பெண் சடலமாகக் கிடந்த ஓவனில், ஒருவர் விபத்தாகவோ, அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடனே, தன்னைத் தானே பூட்டிக்கொள்ள முடியாது என்கிறார் பல்பொருள் அங்காடி பெண் ஊழியர் ஒருவர்.
அவர எந்த அளவுக்கு பலம்கொண்டவராக இருந்தாலும், தன்னைத்தானே இந்த ஓவனில் வைத்து பூட்டிக்கொள்ள இயலாது என்று அங்கே பணியாற்றும் பெண் ஊழியர் விடியோவுடன் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவும் வைரலாகி வருகிறது.
அதில், வெளியிலிருந்து பூட்டும் அமைப்பையும், உள்ளே இருந்து பூட்டலாம், ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்பதையும் விளக்கியிருக்கிறார்.