மக்கள் ஆட்சிக்கு இந்திரா காந்தி உத்வேகம்: தெலங்கானா முதல்வர்
தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்த திட்டம்: டிரம்ப்
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதை டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த கருத்துகள் முக்கிய பிரச்னையாக இருந்தது. அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்ஸிகோவுடனான எல்லையை உறுதிப்படுத்துவேன் என்று டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.
இதையும் படிக்க : ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை
இந்த நிலையில், ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில், டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவுக்கு பதிலளித்த டிரம்ப், உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் வெற்றி பெற்றார். வருகின்ற ஜனவரி மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
டிரம்ப் அரசின் எல்லைப் பாதுகாப்புத் துறைக்கு தலைவராக முன்னாள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் இயக்குநர் டாம் ஹோமனை நியமித்துள்ளார்.
இவர், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், “ஜோ பைடனால் விடுவிக்கப்பட்ட லட்சக்கணக்கான சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் தற்போதே பேக் செய்வது நல்லது” எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களை பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.