மகாராஷ்டிரத்தில் எங்களுக்கே வெற்றி: பாஜகவின் மன உறுதிக்கான காரணங்கள்!
BB Tamil 8 Day 43: ‘அவன பார்த்தா ஒரு மாதிரியாவுது’ - தர்ஷிகாவின் மண்டைக்குள் பட்டாம்பூச்சி
வீடு மாறியது, வாஸ்து படி பெண்களுக்கு சரியில்லை போல. ஷாப்பிங் செய்ததில் பயங்கர சொதப்பல். டாஸ்க் தருவதிலாவது சுவாரசியம் காட்டுவார்கள் என்று பார்த்தால் ஆரம்பமே பஞ்சாயத்தாக அமைந்து விட்டது.
”நீங்க இன்னமும் இந்த வீட்டில் வாழத் துவங்கலை” என்று பிக் பாஸ் வேறு கடுப்பைக் காட்டுகிறார். “ஈகோவை ஒதுக்கி வைச்சுட்டு சுவாரசியமா பண்ணுங்க” என்று விசே கதறி விட்டுச் சென்றாலும் குடுமிப்பிடிச் சண்டை குறையவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 43
பெண்கள் அணிக்கு இடம் மாற சத்யா முன் வந்தார். “அடுத்த வாரம் நான் போறேன்” என்று உறுதியேற்றார் அருண். பெண்கள் அணிக்கும் அருணிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். அவர் செல்லும் வாரத்தில் பல கலாட்டாக்களை எதிர்பார்க்கலாம்.
பிரின்சிபல் மேடம் x VP சாரின் லவ் டிராக் ‘புஸ்ஸாகி’ விட்ட நிலையில் இன்னொரு பூ பூக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம், விஷாலைக் காணும் போதெல்லாம் தர்ஷிகாவின் மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கியிருக்கிறதாம். இந்த விஷயத்தை அவர் ஜாக்குலினிடம் ‘blushing’ -ஆக சொல்ல “ஒரு மாதிரி நல்ல ஃபீலிங்க்ல அது. செமயா இருக்கும்” என்று அவரும் இந்த ரொமான்ஸை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்.
“நாமதான் பாய்ஸ் டீமிற்கு இனி டாஸ்க் தரப்போறோம். எது எதுல்லாம் பண்ணக்கூடாதுன்னு முதல்ல முடிவு பண்ணிப்போம்” என்று சாச்சனா சொல்ல பெண்கள் அணியில் விவாதம் நடந்தது. “அருணை வாட்டர் இன்சார்ஜ் ஆக்கி அழகு பார்ப்போம்” என்று பெண்கள் கொலைவெறியுடன் இருந்தார்கள். “யார்.. யாருக்கு எந்தப் பதவி வேணும்ன்னு அவங்களுக்கு உள்ளேயே அடிச்சுப்பாங்க பாரேன்” என்று ஆண்கள் அணியில் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
தர்ஷிகாவின் மண்டைக்குள் பட்டாம்பூச்சி
ஆண்கள் அணிக்குச் செல்லும் பெண் யார்? “நான் போகட்டுமா.. ஆசையா இருக்கு.” என்று தர்ஷிகா கிளுகிளுப்பான தொனியில் கேட்க “எனக்கு ஆண்கள் அணியில் எவருமே நெருக்கமில்லை. அதனால அந்தப் பக்கத்தைப் பார்க்கணும்” என்று சொன்ன ஆனந்தி தேர்வு செய்யப்பட்டார். “ஆக்சுவலி.. பாய்ஸ் டீம் ரொம்ப தங்கமானவங்க.என்னை நல்லாப் பார்த்துக்கிட்டாங்க” என்று ஆனந்தியிடம் சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார் அன்ஷிதா.
நாள் 43 விடிந்தது. ராவணன் படத்திலிருந்து “நேத்தி வரைக்கும் உங்க சட்டம்.. இன்னைக்கிருந்து எங்க சட்டம்’ என்கிற பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். அதிகாரம் பெண்கள் அணிக்கு கைமாறியிருப்பதை குறிக்கும் பாடலாம். அது சரி, இந்தப் பாடலின் முதல் வரி ‘கோடு போட்டா, கொன்னு போடு’ என்று வருகிறது. வீட்டிற்கு நடுவே கோடு போட்டவர் பிக் பாஸ்தான். எனில் அவரை என்ன செய்யலாம்? (சொந்த செலவுல சூன்யம் வெச்சிக்கிட்டீங்களே பாஸ்!).
தங்களுக்கு கிடைத்த பொம்மையை உடனே ஆடிப் பார்க்கும் ஆசையுடன், காலையிலேயே டாஸ்க் தர ஆரம்பித்தார் மஞ்சரி. முத்துவிற்கு உடற்பயிற்சி செய்யும் டாஸ்க். “3 செட் போட வேண்டும்” என்று சொல்லிவிட்டு அதைக் கண்காணிக்கும் பொறுப்பை சவுந்தர்யாவிடம் சொல்லி விட்டு சென்று விட்டார் மஞ்சரி. (Nature’s call).
இந்த டாஸ்க்கை செய்வதற்கு முதலில் போக்கு காட்டினார் முத்து. ``கிச்சன் இன்சார்ஜ் யார்ன்னு முடிவு பண்ணிட்டு வாங்க” என்று விதியையும் சரியாகவே சுட்டிக் காட்டினார். என்றாலும் மஞ்சரி வற்புறுத்தவே டாஸ்க் செய்ய முடிவு செய்தார். முத்துவிடம் எப்போதுமே ஒரு ஸ்போர்டிவ்னஸ் இருக்கிறது. “நீயா நிறுத்தச் சொல்ற வரைக்கும் செய்யறேன். ஆக்சுவலி டாஸ்க் யாருக்குன்னு பார்த்துடலாம்” என்கிற சவால் உணர்வுடன் அதிகமான எண்ணிக்கையில் அவர் செய்ததைப் பார்த்து கண்காணிப்பாளரான சவுந்தர்யாவிற்கு வியர்த்து விட்டது. “போதும் முத்து..” என்று எச்சரித்துக் கொண்டிருந்தார். “டாஸ்க் கொடுக்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு பெண்கள் அணி உணரட்டும்” என்பது முத்துவின் நோக்கம்.
அழுத மஞ்சரி - விடாமல் மல்லுக்கட்டிய அருண்
இந்த சீசனில் முதன் முறையாக நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. (மெயின் எபிசோடில்). பணக்கார நாய் போல. வாய்க்கு வலிக்காமல் குரைத்துக் கொண்டிருந்தது. ஆண்கள் அறையில் அருண், விஷால், அன்ஷிதா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் நாய் குரைக்கக் காரணம். சொகுசு அறை கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்போல.
கட் செய்தால் முத்து தன் உடற்பயிற்சி டாஸ்க்கை ஆவேசமாக தொடர, மஞ்சரியை அழைக்கிறார் வர்ஷினி. (முத்துவை குமரன் என்று அழைப்பவர் மஞ்சரி மட்டுமே.) “குமரன்.. ஓவர் ஆக்ட் பண்ணாத. ஒரு செட் செஞ்சா போதும்ன்னு சவுந்தர்யா கிட்ட சொல்லியிருந்தேன்” என்று அவர் சொல்ல சீனிற்குள் அருண் என்ட்ரி. எனில் பஞ்சாயத்து ஆகுமா.. ஆகாதா? ஆனது…
“மஞ்சரி.. உங்களுக்கு டாஸ்க் கொடுக்கும் பவரை யார் தந்தது.. புதிய விதிகள் இன்னமும் அமுலுக்கு வராத நிலையில் பழைய விதிகள்தான் செல்லுபடியாகும். நான்தான் இன்னமும் கேப்டன். டாஸ்க்கை கண்காணிக்க இன்னொரு நபரா?” என்றெல்லாம் கையைக் கட்டிக் கொண்டு வாதிட்டார் அருண். ஆனால் அருணிடம் இப்படியொரு எனர்ஜி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. விடாமல் மல்லுக்கட்டுகிறார். அருண் கேட்கும் பாயிண்ட்டுகள் அனைத்துமே சரியானது. மஞ்சரியால் லாஜிக்காக இதை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் அழுகை மோடிற்குச் சென்று “குமரன். என் பிரெண்டு. அதனாலதான் கொடுத்தேன்” என்று சொதப்புகிறார்.
“இனிமேல் யாரும் டாஸ்க் பண்ணாதீங்க. கொடுக்காதீங்க.. புதிய கேப்டன் தேர்வாகட்டும்.” என்று இறுதியாக அறிவித்தார் அருண். இதற்கிடையில் சவுண்டு சரோஜா வேறு புயலாக மாறி “அவங்க பிரெண்டுக்குள்ள எதையோ பண்ணிக்கிட்டாங்க.. உங்களுக்கு என்ன?” என்று எதையாவது பேச வேண்டுமே என்கிற காரணத்திற்காக அருணிடம் அநாவசியமாக கத்திக் கொண்டிருந்தார். மௌனமாக இருக்கும் போது அழகாக இருக்கிற சவுந்தர்யாவின் முகம் கத்தும் போது விகாரமாகி விடுகிறது.
‘சாதாரண டாஸ்க் செய்வதற்கே பயங்கர அலப்பறை’
இந்தச் சண்டையின் சத்தம் பவித்ராவிற்கு தாலாட்டுச் சத்தமாக இருந்தது போல. சோபாவில் அமர்ந்திருந்தவர் அப்படியே கண் அயர, நாய் குரைத்தது. இன்னொரு பக்கம் ஜாக்குலினின் மடியில் படித்திருந்த அன்ஷிதாவும் தூக்கக் கலக்கத்தில் ஆழ்ந்தார். “யோவ் கேப்டனு.. என்னய்யா நடக்குது.. நாய் குரைச்சு அஞ்சு நிமிஷமாச்சு?” என்று பிக் பாஸ் சத்தம் போட, பவித்ராவின் பக்கத்தில் இருந்த வர்ஷினிக்கு டாஸ்க் கொடுக்க முடிவு செய்தார் அருண்.
விவாதத்தில் மஞ்சரி சொதப்பினாலும், மந்தமான போட்டியாளராக கருதப்பட்ட வர்ஷினி, இப்போது லாஜிக்கில் பின்னியெடுத்தார். “விஷால் காலைல தூங்கினப்ப நீங்க ஏன் டாஸ்க் தரல?” என்று அவர் மடக்க அருணால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. ‘ஸாரிம்மா’ என்று பம்ம வேண்டியிருந்தது. விஷாலின் சார்பில் தண்டோரா போடும் டாஸ்க்கை தீபக் திறமையாகச் செய்து முடித்தார். “விஷால் பக்கத்துல இருக்கறவங்கதானே டாஸ்க் பண்ணணும்?” என்று இதையும் மடக்கிய வர்ஷினி, பிறகு பவித்ராவிற்கான தண்டனையை செய்து முடித்தார்.
இவர்கள் டாஸ்க் டாஸ்க் என்று மல்லுக்கட்டுவதெல்லாம் சாதாரண விஷயம். தண்டோரா போடும் அறிவிப்பையே வித்தியாசமாகச் செய்து மக்களைக் கவரலாம். ஆனால் இதற்கே மூக்கால் அழுது சண்டை போடுகிறார்கள். இந்த நோக்கில் ஸ்போர்ட்டிவ்வாக முன்வந்து பங்கேற்ற தீபக் பாராட்டுக்குரியவர். “அடுத்த கேப்டன் ஆகப்போகும் விஷால் தூங்கியதால்…” என்கிற பிட்டையும் அறிவிப்பில் அவர் இணைத்துப் போட ‘அய்யா.. வேண்டாய்யா’ என்று ஜாலியாக அலறினார் விஷால்.
இந்த வாரத்தின் கேப்டன் மஞ்சரி - பிக் பாஸின் கடுமையான எச்சரிக்கை
கேப்டனுக்கான போட்டி தொடங்கியது. மஞ்சரியும் விஷாலும் மோதுவார்கள். லெமன் ஸ்பூன் என்கிற ஆதிகாலத்து விளையாட்டு. யார் அதிக நேரம் ஸ்பூனில் எலுமிச்சையை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் வெற்றி. மஞ்சரி கடைவாயில் ஸ்பூனை கடித்தாற் போல் வைத்திருந்தது நல்ல டெக்னிக் போல. ஒரு முறை அவுட் ஆனால் இரண்டாம் சான்ஸ் தரப்படும். அதிலும் அவுட் என்றால் எதிராளி வெற்றி என்கிற விதியுடன் ஆட்டம் துவங்கியது.
இந்தச் சமயத்தில் முத்துவின் கமெண்ட்ரி ரகளையாக இருந்தது. ‘ஆஹா.. மெல்ல. நட. மேனி என்னாகும்? என்கிற பாடல் உள்ளிட்டு நகைச்சுவையை அள்ளித் தெளித்தார். ஆனால் இதை பவித்ரா ஆட்சேபித்தார். போட்டியாளர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று. சரிதான். யாராவது சிரித்து விட்டால் ஸ்பூன் விழுந்து விடும். விஷாலும் மஞ்சரியும் சீரியசான முகத்துடன் உலவிக் கொண்டிருந்தார்கள். “டாஸ்க் ஆரம்பிச்சு 35 நிமிஷம் ஆச்சு.. நல்லாவே தாக்குப் பிடிக்கறாங்க.. எனவே இரண்டாம் சான்ஸ் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்தார் பிக் பாஸ்.
ஒரு கட்டத்தில் விஷாலும் மஞ்சரியும் அருகருகே நெருங்கி பார்த்துக் கொண்டார்கள். அது ரிவேன்ஜ் பார்வையா. ரொமான்ஸா... சாதாரணமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. “நோக்கு வர்மத்தால் ஜெயிக்க முடியுமா என்று பார்க்கிறார்” என்று இதையும் முத்து கிண்டலடித்தார். மஞ்சரியின் பின்னால் இருந்த விஷால் நகர்ந்த போது, அவர் மேல் மோதி சட்டென்று திரும்பிப் பார்க்க எலுமிச்சை கீழே விழுந்தது. எனவே மஞ்சரி வெற்றி. அருகே சென்று விளையாடாமல் தூரத்தைக் கடைப்பிடித்திருந்தால் விஷால் வெற்றி அடைந்திருக்கலாம்.
“வைல்டு கார்டு என்ட்ரில வந்து கேப்டன் ஆனது சந்தோஷம். நல்ல கேப்டனா இருப்பேன். தினமும் பத்து நிமிஷம் எல்லோரும் உக்காந்து பேசலாம்” என்று பதவியேற்பு விழாவில் சொன்னார் மஞ்சரி. (வர்ற கேப்டன்கள் எல்லாம் இப்படித்தான் சொல்றீங்க. ஒண்ணும் நடக்க மாட்டேங்குது!).
கேப்டன் பேசி முடித்ததும் உள்ளே வந்த பிக் பாஸ், “கேப்டன்.. நீங்க பேசினதுல.. Feedforward-ன்ற வார்த்தை எனக்குப் பிடிச்சிருந்தது. இந்த வீட்ல ஒழுக்கம் குறைஞ்சிக்கிட்டே போகுது. சின்ன விஷயத்துக்கு பர்மிஷன் கேட்கறவங்களும் இருக்காங்க. ஆனா அது குறைவு. பாதி ஷோ முடிஞ்சிருச்சு.. இன்னமும் இந்த வீட்டில் நீங்க வாழத் தொடங்கல. நான் சீரியஸா இருக்கணுமா... உங்கள்ல ஒருத்தனா இருக்கணுமான்றதை நீங்கதான் முடிவு பண்ணணும்” என்று ‘சிங்கப்பாதையா... பூப்பாதையா?’ என்கிற ரேஞ்சிற்கு பிக் பாஸ் சீரியஸாக அட்வைஸ் கேட்டதும் அனைவரும் திகைப்படைந்தார்கள்.
“இனிமே சாப்பாட்டை யாரும் ஷோ் பண்ணாதீங்க. ஒரு காரணத்திற்காகத்தான் இந்த கோடு இருக்கு. விதிமுறைகள் இருக்கு. இந்த ஒரு வாரத்திற்கு அதை ஃபாலோ பண்ணிப் பார்ப்போம்” என்றார் கேப்டன் மஞ்சரி.
நாமினேஷன் டாஸ்க்கில் காமெடி
TEAM SWAPPING TIME. “ஆண்கள் அணிக்கு செல்ல ஆசைப்பட்ட தர்ஷிகா..” என்று ஆரம்பித்த மஞ்சரி “அது இயலாததால் ஆனந்தி செல்வார்” என்று சொல்லி முடித்தது நல்ல குறும்பு. பெண்கள் அணிக்கு சத்யா செல்வார். யார் சமையல் என்கிற பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டன.
நாமினேஷன் பிராசஸ் துவங்கியது. அணி மாறிச் சென்ற ரயானுக்கும் அன்ஷிதாவிற்கும் நேரடி நாமினேஷன் பவர் இருக்கிறது. அதை வைத்து அவர்கள் முறையே வர்ஷினியையும் முத்துவையும் நாமினேட் செய்தார்கள். “முத்து ஒரு ஸ்ட்ராங்கான பிளேயர். பேச்சுத் திறமையை வெச்சு எல்லோரையும் கவர் பண்ணிடறாரு” என்றார் அன்ஷிதா. இது சரியான காரணமாகத் தெரியவில்லை. மட்டுமல்லாமல் முத்துவை வெளியேற்றுவது கடினம். எனவே அன்ஷிதா செய்தது விரயமாக்கப்பட்ட நாமினேஷனும் கூட.
போட்டியாளர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து ‘எப்படி ஆடினால் இந்த கேம் சுவாரசியமாக அமையும்’ என்பதை மையப்படுத்தி யோசிப்பதுதான் நன்று. ஆனால் அவை பெரும்பாலும் நிகழ்வதில்லை.
மற்றவர்களுக்கான நாமினேஷன் வாக்குமூல அறையில் நடந்தது. ஆண்களில் பலரும் சவுந்தர்யா மீது கொலைவெறியுடன் வாக்குகளை குத்தினார்கள். பெண்கள் அணி கலவையான முறையில் குத்தியிருந்தது. நாமினேஷன் காரணங்களை பிக் பாஸ் பொதுவில் சொன்னார். பெயர் குறிப்பிடாமல் அவர் சொன்னாலும் அது யாராக இருக்கும் என்பது எளிதில் யூகிக்கும் வகையில் இருந்ததால் சபை வெடித்துச் சிரித்தது.
ஆக.. இந்த வாரத்தில் நாமினேட் ஆனவர்கள்: ரயான், ராணவ், சிவக்குமார், ஜாக்குலின், ஆனந்தி, தர்ஷிகா, விஷால், பவித்ரா, சாச்சனா, சவுந்தர்யா, மற்றும் அருண். வர்ஷினியும் முத்துவும் நேரடி நாமினேஷன். இதில் ரயானும் பவித்ராவும் பலவீனமான போட்டியாளரர்களாகத் தெரிகிறார்கள். வரவேற்பறையில் பெண்கள் அமர்ந்திருக்க, ஆண்கள் AVP டாஸ்க் மாதிரி எதையாவது யோசித்தார்களா என்று தெரியவில்லை.
விஷாலிடம் காதல் தூது சென்ற ஜாக்குலின்
‘விஷாலைப் பார்த்தா ஒரு மாதிரியாவுது’ என்று கடந்த இரவில் தர்ஷிகா சொன்னதையடுத்து அதைக் கொண்டு போய் விஷாலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக்குலின். “மூஞ்சுல ஏதோ மாற்றம் தெரியுதே?” என்று ஜாக் போட்டு வாங்க முயல ‘சான்ஸே இல்ல.. ஏற்கெனவே வாங்கின அடியெல்லாம் போதும்.. கிளம்புங்க. காத்து வரட்டும்’ என்று அந்தக் கேட்டை உடனே மூடினார் விஷால். “ஏண்டா.. இப்படி இருக்கே.. அதுவொரு மாதிரி நல்ல ஃபீலிங்” என்று ஏற்றி விட முயன்றார் ஜாக். (ஜாக்.. நீங்க செய்யற காரியத்துக்கு பேர் என்ன தெரியுமா?!).
ஷாப்பிங் டாஸ்க். ‘ஒண்ணு இங்க இருக்கு.. இன்னொண்ணு.. எங்க’ என்கிற கரகாட்டக்காரன் படத்தை வைத்து வாழைப்பழ டாஸ்க். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண்கள் கட்டப்படும். ஒரு பிரிவினர் வாழைப்பழத்தை ஊட்ட வேண்டும். இன்னொரு பிரிவு சாப்பிட வேண்டும். தங்களின் அணிக்கு சரியாக ஊட்டி விட்டால் 1000 பாயிண்ட் கிடைக்கும். தவறாக ஊட்டினால் எதிரணிக்கு ஆயிரம் பாயிண்ட் சென்று விடும்.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த டாஸ்க் காமெடியாக நடந்தது. ஜெப்ரி வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு எங்கோ ஒரு மூலையில் சென்று கொண்டிருந்தார். அவரை ராணவ் கையைப் பிடித்து அழைத்து வந்து சேர்த்தார். எப்போது வாழைப்பழம் வரும் என்று முத்து வாயைப் பிளந்தபடியே அமர்ந்திருந்தார். சிரிப்பலைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த இந்த டாஸ்க்கில் ஆண்கள் 9000 மதிப்பும் பெண்கள் 11000 மதிப்பும் சம்பாதித்தது.
“நான் போறேன்..” என்று வழக்கம் போல் ஷாப்பிங் டாஸ்க்கிற்கு ஆர்வமாக வந்தார் சாச்சனா. “நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்க போனா நல்லது. ஏன்னா அவங்கதான் சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை எடுத்துட்டு வருவாங்க. மத்தவங்க போனா லக்ஸரி பொருட்களை அள்ளிட்டு வருவாங்க” என்று ஜாக்குலின் சொன்னது நல்ல பாயிண்ட். இந்த வகையில் அவர் அன்ஷிதாவை முதன்மையாக பரிந்துரைத்தார். “அப்ப எனக்கு சமைக்கத் தெரியாதுன்றீங்களா?” என்று வாதிட்டார் சாச்சனா.
ஒருவழியாக யார் ஷாப்பிங் செல்வது என்று முடிவாகியது. ஆண்கள் அணியில் இருந்து முத்து, தீபக், விஷாலும் பெண்கள் அணியில் இருந்து அன்ஷிதா, ஜாக்குலின், சாச்சனா ஆகியோரும் சென்றார்கள். ‘யார் யார் எதை எடுக்க வேண்டும்?’ என்று பெண்கள் அணி தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு சென்றது.
பிக் பாஸ் விரித்த வலையில் மாட்டிக் கொண்ட போட்டியாளர்கள்
ஷாப்பிங் செய்யச் சென்றவர்களுக்கு ஒரு சிறிய சர்ப்ரைஸ் வைத்திருந்தார் பிக் பாஸ். அதாவது ‘நீங்கள் ஷாப்பிங் செய்து முடித்ததும் பஸ்ஸர் அடிக்கப்படும்’ என்றார். ஆகவே அவசரம் அவசரமாக ஷாப்பிங் செய்ய வேண்டாம் என்பது அதன் பொருள். ஆனால் அதுவொரு டிராப். பிக் பாஸ் கோடு போட்டால் அதற்குப் பின்னால் ரோடு இருக்கிறது என்று அர்த்தம்.
“வாங்க.. நிதானமா எடுக்கலாம்” என்று அனைவரும் களத்தில் இறங்கினார்கள். பிரிட்ஜ்ஜின் மீது பாய்ந்த விஷால், சிக்கன் பாக்கெட்டை மொத்தமாகத் தூக்க அவரிடமிருந்து பாதியைப் பிடுங்கினார் சாச்சனா. இரு அணியினரும் பொருட்களைக் குவித்து விட்டு எவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்துக் கொண்டிருக்க ‘ஷாப்பிங் டைம் முடிஞ்சிடுச்சு. பில்லிங்கிற்கு எல்லாம் நேரம் தரப்படமாட்டாது’ என்று உடனே பஸ்ஸரை அடித்தார் பிக் பாஸ்.
வழக்கமான ஃபார்மெட்டில் ஷாப்பிங் செய்ய விட்டிருந்தால் கூட சரியாகச் செய்திருப்பார்களாக இருக்கலாம். டைம் கொடுத்தது தப்பாகப் போயிற்று. அது பிக் பாஸ் விரித்து வைத்த வலை. இரு அணியினரும் ‘கணக்கு சரியா இருக்குமா?’ என்கிற கவலையுடன் அரைமனதுடன் கிளம்பிச் சென்றார்கள்.
கணக்கு வந்தது. ஆண்கள் அணி 9000 சம்பாதித்திருந்த நிலையில் 9180-க்கு ஷாப்பிங் செய்திருக்கிறார்கள். எனவே மயிரிழையில் தப்பித்தார்கள். விஷால் சந்தோஷம் அடைந்து கைத்தட்ட உடனே அதைத் தடுத்தார் முத்து. “இதுக்கெல்லாம் கைதட்டினா என்ன சொல்றது?” என்று நொந்து போன பிக் பாஸ், அடுத்ததாக பெண்கள் அணிக்கு வந்தார். சஸ்பென்ஸூடன் அவர்கள் காத்திருந்தனர். “11000 சம்பாதிச்சிட்டு 12040-க்கு ஷாப்பிங் பண்ணியிருக்கீங்களே.. நியாயமா இது?” என்று பிக் பாஸ் கேட்க சவுந்தர்யாவின் முகம் விசித்திரமான கோணத்தில் சுருங்கியது. ‘யெஸ்.. இதைப் பார்த்ததும் என் ரியாக்ஷனும் இதுதான்” என்றார் பிக் பாஸ்.
“நீங்க இந்த வீட்டில் இன்னமும் வாழத் துவங்கலை” - கடுப்பான பிக் பாஸ்
“நான் என்ன அனுப்பறனோ அதை வெச்சு சமாளிங்க. நான் ஏற்கெனவே சொன்னேன். இந்த வீட்டில் நீங்க இன்னமும் வாழத் துவங்கலை. இங்க வாழறதுக்கு சமநிலை வேணும். சொந்தமா யோசிக்கவும் தெரியணும். சேர்ந்து சுவாசிக்கணும்ன்னும் புரியணும்.. தனித்தன்மை, போட்டி மனப்பான்மை, கூட்டு முயற்சி. இதுல சமநிலை அடைஞ்சா.. இந்த நிகழ்ச்சியோட சாராம்சத்தை நீங்க புரிஞ்சிப்பீங்க.. ஆண்களுக்கு அவர்களின் பொருட்கள் அனுப்பப்படும்” என்ற பிக் பாஸ், பெண்கள் அணியை தனியாக அழைத்து “ஜாம் பாட்டில் மட்டுமே ஆறு வாங்கியிருக்கீங்க.. என்னாதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?” என்பது போல் எச்சரிக்கை செய்தார்.
பெண்கள் அணியில் அனைவரும் சாச்சனாவை திரும்பிப் பார்த்தார்கள். “அவசியமான பொருட்களை மட்டும்தான் எடுக்கணும். அளவா உபயோகிக்கணும்.. சாச்சனா ஒரு ரொட்டிக்கு அதிக அளவு ஜாம் யூஸ் பண்றதைப் பார்த்திருக்கேன். இது நம்ம வீடு கிடையாது. இருக்கறத வெச்சு வாழ பழகணும்.. பாய்ஸ் டீம் பசியோட இருந்தாலும் சமாளிச்சாங்க” என்றெல்லாம் அன்ஷிதா சொல்ல அப்போதே கண்கலங்கத் துவங்கினார் சாச்சனா. “ஏன் அவளை அனுப்பிச்சீங்க?” என்று மஞ்சரி ஜாக்குலினைக் கடிந்து கொண்டார்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த சவுந்தர்யா தன்னைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த சாச்சனா எழுந்து செல்ல, ‘இரு.. அவங்களுக்கு தைரியம் இருந்தா நேரா வந்து சொல்லட்டும்” என்று ஆனந்தி தடுத்தாலும் குறுகுறுப்போடு எழுந்து சென்ற சாச்சனா.. ‘என்னைப் பத்தியா பேசறீங்க?” என்று கேட்டார். “ஜாம் பாட்டில் எடுக்கறத என் பொறுப்புல விட்டாங்க.. நான் ஒண்ணுதான் எடுத்தேன். ஆனா அவங்களும் ஏன் எடுக்கணும்.. அது என் தப்பா? என் பங்கு ஜாமைத்தான் சாப்பிட்டேன்..அதுவும் தப்பா..?” என்று தன்னை டிஃபெண்ட் செய்து அழத் துவங்கினார் சாச்சனா.
‘தீபக் ரொம்ப டாமினேட் பண்றாரு” - ஆண்கள் அணியில் புகார்
சவுந்தர்யாவிடம் சொன்ன விளக்கத்தையெல்லாம் அன்ஷிதா புகார் சொன்ன போதே சாச்சனா சொல்லியிருக்கலாம். மேலும் ஒரு நெருக்கடியான டாஸ்க்கில் கலந்து கொள்ளச் செல்லும் போது குழப்பங்கள் நேரலாம். எனில் அனைவருமே அதற்கு பொறுப்பேற்பதுதான் சரியானது. சாச்சனாவை மட்டும் கைகாட்டி தப்பிக்க நினைப்பது முறையல்ல.
பெண்கள் அணியில் இப்படியொரு குழப்பம் என்றால், ஆண்கள் அணியில் வேறு விதமான சர்ச்சை. அது தீபக்கின் ஆதிக்க உணர்வு பற்றியது. “அரிசியா எடுத்து குவிச்சிட்டாரு.. நான் எடுத்து வெச்ச நொறுக்குத் தீனியெல்லாம் வெளில எடுத்து வெச்சிட்டாரு” என்று தீபக் பற்றி மற்ற ஆண்களிடம் அனத்திக் கொண்டிருந்தார் விஷால்.
அதே போல் சிவக்குமாரும் “சீனியர்ன்ற பேர்ல தீபக் ரொம்ப பந்தா பண்றாரு.. ஒரு தோசையைக் கூட ஒழுங்கா செய்ய விடமாட்டேங்கறாரு.. நாங்க என்ன விரும்பியா வைல்ட் கார்ட்ல வந்தோம்.. எங்களுக்கும் லான்ச்சிங் டேல வரணும்ன்னுதான் ஆசை. அப்படி அமைஞ்சது.. அது எங்க தப்பா.. நானும் பசங்க கிட்ட சொல்லிப் பார்த்தேன். இப்ப விஷாலுக்கா வலிக்கும் போது அழறான்” என்று ஆனந்தியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
வீடு மாற்றம் என்னும் அம்சம் ஏதாவது சுவாரசியத்தைக் கொண்டு வருமா என்று பார்த்தால் இல்லை. இன்னமும் என்னதான் செய்வது?