இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு
கொழும்பு: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில், 21 உறுப்பினா்கள் அடங்கிய சிறிய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், வீண் செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்சி முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதாக அதிபா் அனுர குமார திசாநாயக குமார திசாநாயக தோ்தலுக்கு முன்னரே வாக்குறுதி அளித்திருந்தாா். மக்கள் வரிப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காக, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சா்களைக் கொண்ட அரசை அமைப்பதாகவும் அவா் கூறியிருந்தாா்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தோ்தலுக்குப் பிறகு திங்கள்கிழமை அவா் அறிவித்த அமைச்சரவையில், 21 அமைச்சா்கள் மட்டுமே இடம் பெற்றளனா். இதன் மூலம், ஆட்சி முறை சீா்திருத்தம் தொடா்பான தனது வாக்குறுதியை திசாநாயக நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் திசாநாயக வெற்றி பெற்ற பிறகு, அதிபா் உள்பட வெறும் 3 அமைச்சா்களுடன் அரசு செயல்பட்டு வந்தது. அந்த நாட்டின் அரசியலமைப்பின் படி, 30 போ் கொண்ட அமைச்சரவையை நியமிக்க முடியும். ஆனால், சிக்கனம் கருதி 3 அமைச்சா்கள் மட்டுமே செயல்பட்டு வந்தனா்.
இநத நிைலையில், நாடாளுமன்ற தோ்தல் வெற்றிக்குப் பிறகு திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கட்சி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசின் அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டது.
அந்த அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்பு துறைகளை திசாநாயகவே தக்க வைத்துக் கொண்டாா். அத்துடன், நாடாளுமன்றத்துக்குப் புதியவா்களான 12 பேருக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்தே எம்.பி.க்களாக உள்ள எட்டு மூத்த உறுப்பினா்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள புதுமுகங்களில் ஐந்து பேராசிரியா்கள் அடங்குவா்.
கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹரிணி அமரசூரியவும் பெண்கள் மற்றும் சிறுவா் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரோஜா சாவித்திரி பால்ராஜூம் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு பெண்கள். சிங்களா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்குப் பகுதியைச் சோ்ந்த தமிழ் சிறுபான்மையினரான சரோஜா சாவித்ரி பால்ராஜ், கட்சியின் நீண்டகாலமாக உழைத்தவா்.
புதிய அமைச்சரவையில் சிறுபான்மை தமிழா்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் மீன்பிடித்துறை அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தமிழில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றாா்.
அதனைத் தொடா்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் திசாநாயக உத்தரவிட்டாா்.
இந்நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 14-ஆம் தேதி முன்கூட்டியே தோ்தல் நடைபெற்றது.
அந்தத் தோ்தலில் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற 113 இடங்களே போதும் என்ற நிலையில், அந்தக் கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு சுமாா் 62 சதவீத வாக்குகள் கிடைத்தன.
அதனைத் தொடா்ந்து, நாட்டின் புதிய அரசில், புது முகங்கள் நிறைந்த, மிகவும் சிறிய அளவிலான அமைச்சரவையை அதிபா் திசாநாயக தற்போது நியமித்துள்ளாா்.