கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து வருகிறேன்: அமைச்சர் துரைமுருகன்
`கொலை நகரமான டீ எஸ்டேட்’ : எரியும் பனிக்காடு புத்தக பின்னணி| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
உலக வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு பொதுவான விஷயம் நமக்குப் புலப்படும்.
'எளிய மனிதர்கள் என்றுமே ஒடுக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்'
இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய வன்முறைகள் பற்றி நாம் அறிவோம். அவை வரலாற்றில் ஐந்து சதவீதம் கூட பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட நூல்களில் முக்கியமான ஒன்று 1969 ஆம் ஆண்டு வெளியான பி.எச்.டேனியலின் 'ரெட் டீ (எரியும் பனிக்காடு)'
பி.எச்.டேனியல், நாகர்கோவில் அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர். 1940 ஆம் ஆண்டு, வால்பாறை காரமலை எஸ்டேட்டில் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் அங்கே பணியாற்றினார்.
1900 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் கூலியாக வேலை செய்த பலரை நேர்காணல் செய்து, தகவல்களைத் திரட்டி, அவர் எழுதிய புத்தகம் தான் இது.
அதுமட்டுமல்ல! 'தென்னிந்திய தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்' என்ற ஒன்றை நிறுவி, ஏகாதிபத்திய ஆங்கிலேயர்களிடமிருந்து அப்பாவி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் டேனியல்.
தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யும் மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாக பதிவு செய்திருப்பது தான் இப்புத்தகத்தின் சிறப்பு.
கதைச் சுருக்கம்:
1925 ஆம் ஆண்டின் டிசம்பரில் துவங்குகிறது கதை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைப் பற்றியும் அங்கு நிலவும் கடும் பஞ்சத்தைப் பற்றியும் விளக்குகிறது ஆரம்ப அத்தியாயங்கள்.
பிறகு அவ்வூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கருப்பனிடமிருந்து கதை விரிகிறது. அவனுக்கு வள்ளியுடன் திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. ஆனால் இருவரும் ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.
இந்நிலையில், உயிர் பிழைக்க ஏதாவது வேலை கிடைக்குமா என பக்கத்து ஊரான கயிற்றாறுக்குச் செல்கிறான் கருப்பன். அங்கே கங்காணி எனும் சங்கரபாண்டியைச் சந்திக்கிறான். அங்கிருந்து தான் கருப்பனின் வாழ்க்கை, அடியோடு மாறிப்போகிறது!
ஆம். சங்கரபாண்டி, வால்பாறை டீ எஸ்டேட்டுக்கு கூலிகளை அழைத்துச் செல்லும் ஒரு ப்ரோக்கர். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து அவர்கள் போடும் காசில் உயிர் வாழ்பவன். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவன். சொந்த ஊரில் கஷ்டப்படும் அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி, அவர்களை டீ எஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்வது தான் அவனுடைய வேலை.
இம்முறை, கருப்பன் மற்றும் வள்ளியோடு சேர்த்து மொத்தம் நாற்பது கூலிகள் அவனிடம் சிக்குகிறார்கள். அவர்களை ரயில் வழியாக, வால்பாறையில் உள்ள 'குமரிமலை எஸ்டேட்' எனும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்கிறான்.
இதன் பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
பி.எச்.டேனியல், தான் சேகரித்த தகவல்களை எல்லாம் தொகுத்து, ஒரு திரைக்கதை எழுவது போலவே, இந்நாவலை மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயங்களின் ஆரம்பத்தில் வரும் மேற்கோள்கள் மூலம், அவருடைய பரந்த வாசிப்பு அனுபவத்தை நாம் உணரலாம். உதாரணமாக, கூலிகளை எஸ்டேட்டுக்குள் கொண்டு வரும்போது, ஷேக்ஸ்பியரின் 'மர்சென்ட் ஆஃப் வெனிஸ்'ல் இடம்பெறும் வரிகளை மேற்கோள் இடுகிறார்.
'எவ்வளவு அழகான முகமூடி பூண்டிருக்கிறது இந்த நகரம்...'
கொலை நகரமான இந்த எஸ்டேட்டின் வெளித்தோற்றத்தை நம்பவேண்டாம் என்றே அதன் உள் அர்த்தம் இருக்கிறது. இப்படி மேற்கோள்கள் வழியாக, அடுத்து வரும் விஷயத்துக்கு நம்மை முன்பே தயார்படுத்தி விடுகிறார் எழுத்தாளர். நிறைய அத்தியாயங்களில், இ.எம். பாஸ்டருடைய புகழ்பெற்ற புத்தகமான 'ஏ பேசேஜ் டு இண்டியா' வில் வரும் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.
*
1902 ஆம் ஆண்டு, The Madras Plantation Act எனப்படும் சட்டம் ஒன்று ஆங்கிலேயர்களால் பிறப்பிக்கப்பட்டது. அது தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களை ஒடுக்கும் விதமாக அமைந்தது. இதுவே இந்நாவலை எழுத முக்கியக் காரணம் என்கிறார் டேனியல்.
வால்பாறை போன்ற தேயிலைத் தோட்டங்களில் கூலியாக செல்பவர்கள், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதே ஊரில் மேல் சாதி எனப்படும் சிலருக்குக் கூலியாக செல்வது தான் இவர்களுடைய பிரதான வேலை. அப்போது தலைவிரித்து ஆடிய தீண்டாமையை நுட்பமாக இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.
கூலிகளை எஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்லும் ரயில் பயணம் பற்றிய விரிவான அத்தியாயம் ஒன்று வரும். அதைப் படிக்கும்போதே ஹிட்லர் வதைமுகாம்களுக்கு, யூத மக்களை அழைத்துச் செல்லும் காட்சி நினைவுக்கு வந்து போகிறது. பல ஒடுக்கப்பட்ட மக்களின் இருண்ட வாழ்க்கை இப்படித்தான் இரயில் பயணத்திலிருந்தே துவங்கியிருக்கிறது!
நம் மக்களிடையே அப்போது இருந்த மூடநம்பிக்கைகள் பற்றியும் இந்நாவல் பேசாமல் இல்லை. மேலும் அதை ஆங்கிலேயர்கள் எப்படித் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது பற்றியும் விளக்கியுள்ளார் எழுத்தாளர்.
மேலும் எஸ்டேட்டில் பரவும் மலேரியா காய்ச்சல் பற்றிய மக்களின் புரிதல்கள், அதை சரிசெய்யும் பொருட்டு அங்கிருந்த ஒரு சாமியாரிடம் தாயத்து வாங்கிக் கட்டுவது என மலேரியா காய்ச்சலைச் சுற்றி அப்போது இருந்த மூடநம்பிக்கைகள் அனைத்தும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
எஸ்டேட்டில் வேலை செய்யும் பெண்களை, ஆங்கிலேயர்கள் தங்களுடைய பாலியல் இச்சைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் (காமத்துக்கு சாதி ஏது?). அப்பெண்களின் கணவர்களால் இதை எதிர்த்துக் கூட கேள்வி கேட்க முடியாது. மீறி கேட்டால் அவர்களுடைய கூலி மறுக்கப்படும். அடி உதை விழும். சில சமயம் கொலை கூட அரங்கேறும். ஆனால் அவர்களுடைய இச்சைகளுக்கு வழி கொடுத்தால், வேலை செய்யாமல் கூட கூலியைப் பெறலாம். அப்படி அந்த எஸ்டேட்டில் வாழும் பெண்களைப் பற்றியும் எவ்வித சமரசமுமின்றி இந்நாவலில் எழுதப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவாலும் மற்ற உடல் சார்ந்த பிரச்சனைகளாலும் பாதிக்கப்படும் வள்ளிக்கு, பல முறை கருச்சிதைவு உண்டாகிறது. நடக்கக் கூட முடியாத அவளை வேலைக்குப் போகச் சொல்லி விரட்டுகிறான் சங்கரபாண்டி. இறுதியில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் நிகழ்வது நாம் எதிர்பாராத ஒன்று.
இப்படி நாவல் முழுக்க அக்காலத்தில் நிலவிய அடக்குமுறை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்ணடிமை என எல்லாவற்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.
இந்நாவலில் வரும் எளிய மனிதர்கள், தங்களுடைய அடையாளத்தைத் தேடித் தான் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் பயணம் செய்கிறார்கள். ஆனால் முடிவில் சொந்த நாட்டிலேயே தங்களுடைய அடையாளத்தை இழக்கிறார்கள்.
'சாதாரண ஜீவனின் பிறப்புக்கு அடையாளம் ஏது?
தமிழ் மொழிப்பெயர்ப்பை, வட்டார வழக்குச் சொற்கள் கொண்டு, மிக எளிய நடையில் எங்கேயும் தொய்வில்லாமல் அழகாக கொண்டு செல்கிறார் எழுத்தாளர் இரா. முருகவேள்.
எரியும் பனிக்காடைத் தழுவி இயக்குநர் பாலா, 2013 ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் தான் பரதேசி. இத்திரைப்படத்தைப் பற்றி இரா. முருகவேள் இப்படிச் சொல்லி இருக்கிறார்.
'எனக்கு 'பரதேசி'யில் உடன்பாடு கிடையாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை முழுமையாக அதில் காட்டத் தவறிவிட்டார்கள். வெறுமனே ஒப்பாரி வைத்து மட்டும் அழுகிறது பரதேசி'
சமீபத்தில் வால்பாறை சென்றிருந்தேன். தேயிலைத் தோட்டங்கள் கொண்ட மலைகள் எல்லாம், மனித எலும்புகளின் குவியல் தானோ என்று தோன்றியது. அங்கு வேலை செய்த மனிதர்களை சிறிது நேரம் உற்று கவனித்தேன். இவர்களுடைய முன்னோர்கள் தானே கருப்பனும் வள்ளியும்?!
இப்போதும் அவர்கள் ஓய்வில்லாமல் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். எரியும் பனிக்காடு, இன்னமும் எரிந்து கொண்டே தான் இருக்கிறது.
-சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.