தொடக்கமும் முடிவும் இங்கிலாந்துடன்..! ஓய்வு பெறுவது ஏன்? டிம் சௌதி பேட்டி!
தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு - இவரது நூல்களும்.. விருதுகளும் ஒரு பார்வை!
இலக்கிய உலகின் முக்கிய ஆளுமை
தமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைந்த செய்தி இன்று காலை வெளியானது. பண்பாட்டு ஆய்வுகள், மொழிப்பெயர்ப்புகள், நாவல்கள், இலக்கிய ஆய்வுகள், தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்த நூல்கள் என பரந்துபட்ட தளத்தில் செயல்பட்ட அறிஞர் ராஜ் கௌதமன்.
1950, ஆகஸ்ட் 25-ம் தேதி விருதுநகர் மாவட்டம் (அன்றைய இராமநாதபுரம் ஜில்லா) வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் சூசைராஜ்-செபஸ்தியம்மாள் இணையருக்கு பிறந்தவர். இவரது இயற்பெயர் புஷ்பராஜ்.
புதுப்பட்டி ஆர்.சி. பள்ளியில் ஆரம்பக்கல்வி, மதுரையில் மேல்நிலைக்கல்வி பயின்றார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்தார். அதன்பின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஆ.மாதவையா நூல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.
கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வந்த பரிமளா என்பவரை திருமணம் செய்துகொண்டார் (பரிமளாவும் ஒரு தமிழ் பேராசிரியர். இலக்கிய ஆய்வு நூல்கள் எழுதியிருக்கிறார்). இவர்களுக்கு நிவேதா என்ற மகள் உள்ளார். தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
தமிழ், இலக்கிய ஆய்வுகள்
ராஜ் கௌதமன் தொடக்க காலத்தில் சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். நண்பர்களுடன் இணைந்து 70களில் இலக்கிய வெளிவட்டம் என்ற இதழை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து வெளியான நிறப்பிரிகை இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.
காரைக்கால் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்பேராசிரியராக பணியாற்றினார். புதுசேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப்பேராசிரியராகப் பணியாற்றி 2011-ல் ஓய்வு பெற்றார். இறுதி நாள்களில் நெல்லையில் வசித்து வந்துள்ளார்.
ராஜ் கௌதமன் குறித்துப்பேசும்போது அவரது மனைவி, 1990-ல் எங்களுக்கு ஒரு குழந்தை தவறியது. அதனால் மனமுடைந்துபோனவர் அதிலிருந்து வெளியேற ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ளும் சூழலில் எழுத்தை கையிலெடுத்ததாகக் கூறியிருக்கிறார்.
அடுத்த 10 ஆண்டுகளில் 18 நூல்களை எழுதியுள்ளார் ராஜ் கௌதமன். அவற்றில் தமிழ் ஆய்வு நூல்கள், இலக்கிய ஆய்வுகள், மொழிப்பெயர்ப்புகள், தலித்திய நூல்கள் என பலதரப்பட்ட புத்தகங்கள் அடக்கம்.
35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்..
35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ராஜ் கௌதமன், தமிழகத்தில் தலித்திய சிந்தனைகளை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். அவரது க.அயோத்திதாசர் ஆய்வுகள், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், தலித் அரசியல் ஆகிய நூல்கள் முக்கியத்துவம் பெற்றவையாக கருதப்படுகிறது.
அவரது நாவல்களான சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவை ராஜ் ஆகியவை தன் வரலாற்றுத் தன்மை கொண்டவை.
கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக, கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு, சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ் ஆகிய இவரது இலக்கிய ஆய்வுகள் புகழ்பெற்றவை.
இவரது மொழிப்பெயர்ப்புகளுள், உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வினின் 'The Origin of species', மனவளமான சமுதாயம் - எரிக் ஃப்ராமின் 'The Sane Society', பாலியல் அரசியல் - கேட் மில்லர், அன்பு எனும் கலை -எரிக் ஃப்ராம் (The Art of Loving) ஆகியன முக்கியத்துவம் பெற்றவை.
இலக்கிய விருதுகள்..
விளக்கு விருது (2016), விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது (2018), வானம் இலக்கிய விருது (2022), கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை வழங்கும் முற்போக்கு கலைஇலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு 2024 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
ராஜ் கௌதம் குறித்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பாட்டும் தொகையும் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வரலாற்றை வழி மறித்தவன் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜ் கௌதமன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எழுத்தஆளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb