சென்னை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு
அண்ணனின் மரணம், அடக்க முடியாத கண்ணீர், அமெரிக்க கல்யாண வாழ்க்கை... - நடிகை சுவலட்சுமியின் பர்சனல்ஸ்
தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய அந்த நாயகிகளைப் பத்தி பலரும் அறிந்திடாத பர்சனல் விஷயங்கள் அவங்களோட கரியர் இதைப்பற்றியான தொடர்தான் எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம் நடிகை சுவலட்சுமி.
"ரிப்போர்ட்டர் ஆகணும்னு ரொம்ப ஆசப்பட்டேன். ஆனா, நான் லாயர் ஆகணும்னு என் அண்ணன் ஆசைப்பட்டார். அவரோட ஆசையை நிறைவேத்த, டைரக்டர் சத்யஜித்ரே சார் படத்துல நடிச்சு முடிச்சதும் லா காலேஜ்ல சேர்ந்தேன். வாழ்க்கை ரொம்ப ஹேப்பியா போயிட்டிருந்துச்சு. அந்த நேரத்துலதான் எங்க அண்ணன் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு. குடும்பமே உடைஞ்சிப் போயிடுச்சு. அந்த டைம்ல மாசக்கணக்குல அழுதிருக்கோம். அப்போதான் டைரக்டர் வஸந்த் சார் ‘ஆசை’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். மொதல்ல தயங்கினாலும், அண்ணன் இறந்த துக்கத்துல இருந்து நாங்க மீளணும்னா இடம் மாறித்தான் ஆகணும்னு முடிவெடுத்து, சென்னைக்கு அம்மாவோட வந்தேன்" அப்படின்னு தமிழ் சினிமால வலதுகால் எடுத்து வெச்சதுக்கான காரணத்தைச் சொன்ன சுவலட்சுமி, சினிமா கரியர்ல உச்சத்துல இருந்தப்பவே, சட்டப்படிப்பையும் முடிச்சு... படிப்பு, நடிப்பு ரெண்டுலயுமே தன் திறமையை நிரூபிச்சாங்க.
ஹோம்லி குயினா தமிழ் சினிமால தடம் பதிச்ச சுவலட்சுமியை மறக்க முடியுமா? 'என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு'னு தமிழ்நாட்டு இளைஞர்களைப் பித்துப்பிடிக்க வெச்ச க்யூட்டான தேவதை. அறிவு, அழகு, திறமை... இந்த மூணையும் சமஅளவுல மிக்ஸ் பண்ணா அதுதான் சுவலட்சுமி. இவரோட அறிமுகமே உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை சத்யஜித்ரேவோட ’உத்தரோன்’ படத்துல. அப்போ, சுவலட்சுமி ப்ளஸ் டூ ஸ்டூடன்ட். அந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறமா சட்டம் படிக்கப் போயிட்டாங்க சுவலட்சுமி. இந்த நேரத்துலதான் இவருக்கு ‘ஆசை’ பட சான்ஸ் கிடைச்சிருக்கு.
’மூக்கும் முழியுமா எவ்ளோ லட்சணமா இருக்கா’ன்னு சில பொண்ணுங்களைச் சொல்வோம் இல்லையா? அந்த டைப் ஆஃப் பியூட்டிதான் நம்ம சுவலட்சுமி. அதென்ன ‘நம்ம சுவலட்சுமி’ன்னு கேட்கிறீங்களா? குறிஞ்சிப் பூ பூத்த மாதிரி சில நடிகைகள், ‘அட... இவங்க நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரியே இருக்காங்களே’ அப்படிங்கிற உணர்வை பார்க்கிற எல்லாருக்கும் ஏற்படுத்திடுவாங்க. சுவலட்சுமி அந்த வகையறா. ’ஆசை’ படத்துல அஜீத்துக்கு ஜோடியா சுவலட்சுமி தமிழ்நாட்ல நுழைய, ’யாரு இந்த வட்ட முகத்தழகி; வண்டு கண்ணழகி’னு மொத்த தமிழ் சினிமா ஃபேன்ஸும் சுவலட்சுமியைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சாங்க.
சினிமாவுக்குன்னு சில இலக்கணங்கள் காலங்காலமா இருந்துட்டு வரும். அதுல ஒண்ணு ஃபீல்டுக்குள்ள என்ட்ரியாகுற ஹீரோயின்ஸுக்குப் புதுசா பேர் வைக்குறது. சில ஹீரோயின்ஸ் மட்டுமே சொந்த பேரோடவே அறிமுகவாங்க. அந்தச் சிலர்ல சுவலட்சுமியும் ஒருத்தர். ’சுப்புலட்சுமிங்கிற பேரைத்தான் பெங்காலியில சுவலட்சுமின்னு சொல்லுவாங்க. இவங்க வீட்ல எல்லாருமே கர்னாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஃபேன்ஸ். அதனாலதான் அவங்க பேரை இவருக்கு வெச்சிருக்காங்க. இதுபோலவே, டீன் ஏஜ்லயே சுவலட்சுமி சினிமால அறிமுகமானதும் சுவாரஸ்யமான கதைதான். அதைப் பத்தி இவரே ஒரு இன்டர்வியூவுல சொல்லியிருக்காங்க.
"ஒரு டான்ஸ் புரோகிராம்ல எடுத்த என் போட்டோவை பார்த்துட்டுத்தான் சத்யஜித்ரே சார் என்னை அவரோட படத்துல நடிக்க வைக்கணும்னு டிசைட் பண்ணியிருக்கார். அவரைப் பார்க்கப்போன அந்த நாள் எனக்கு இன்னும் நல்லா நினைவிருக்கு. அன்னிக்கு நான் ஸ்கூலுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அதனால, தலை நிறைய எண்ணெய் வெச்சு வாரி, பின்னலை மடிச்சிக் கட்டியிருந்தாங்க அம்மா. சத்யஜித்ரே சார் என்னை 'உடனே பார்க்கணும்'னு சொல்லி அனுப்பினதால, அந்தப் பின்னல் முடியுடன்தான் சாரை பார்க்கப் போனேன். ’ஸோ லிட்டில், ஸோ யங்'னு என்கிட்ட பேச ஆரம்பிச்சார். பேசிட்டு கிளம்புறப்போ, ‘உன் முடியே இவ்ளோ தானா?’னு கேட்டாரு. நான் என் ஜடைப் பின்னலை அவிழ்த்து விட்டேன். ’அட, முழங்கால் வரைக்கும் உனக்கு முடியிருக்கே!'னு ஆச்சர்யப்பட்டார். அடுத்தடுத்த சந்திப்புகள்ல ‘உத்தரோன்’ படத்துல என் கேரக்டர் பத்தி என் லெவலுக்கு இறங்கி புரிய வெச்சாரு" - இப்படி தன் சினிமா என்ட்ரி பத்தின ஃப்ளாஷ்பேக் கதையைச் சொல்லியிருக்கிற சுவலட்சுமி, அந்த 'உத்தரோன்' படத்துல நடிச்சதோ ஏழ்மையில இருக்கிற கைம்பெண் ரோல்ல.
'முதல் படத்துலேயே கைம்பெண் ரோலா?' - அப்படிங்கிற சென்டிமென்ட் எல்லாம் பார்க்காம, அந்த கேரக்டர்ல துணிச்சலா நடிச்சாங்க சுவலட்சுமி. ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சத்யஜித்ரே சார் தவறிட்டதால, அந்தப் படத்தை அவரோட பையன்தான் டைரக்ட் செஞ்சார். அந்தப் படத்தைப் பார்த்துட்டுதான், டைரக்டர் வஸந்த் அவரோட ‘ஆசை’ படத்துல சுவலட்சுமியை நடிக்கக் கூப்பிட்டார். தெரியாத ஊர், தெரியாத பாஷை... இதனாலயே 'ஆசை' படத்துல நான் நடிக்கலைன்னு சொல்லி சுவலட்சுமி அவாய்டு பண்ணியிருக்காங்க. அப்போ, சத்யஜித்ரேவின் பையன், டைரக்டர்கள் மணிரத்னம், வஸந்த் பத்தி சுவலட்சுமிக்கு எடுத்துச் சொன்னதால, தமிழ் சினிமால நடிக்கச் சம்மதிச்சிருக்காங்க இந்த க்யூட்டி. ஆனா, 'ஆசை' படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன் போட்டிருக்காங்க சுவலட்சுமி. அது என்னன்னா... "கதை ஓகே. ஆனா, கிளாமரா டிரஸ் பண்ண மாட்டேன்"னு இவங்க சொல்ல, 'நீ காலேஜ்க்கு எந்த டிரஸ்ல போவியோ அந்த டிரஸ்ல நடிச்சா போதும்'னு டைரக்டர் வசந்த் சொல்லியிருக்கார். அப்புறம் என்ன... டபுள் ஓகே சொல்லிட்டாங்க சுவலட்சுமி.
‘ஆசை’ படத்துல யமுனாங்கிற கேரக்டர்ல, துறுதுறுப்பான காலேஜ் கேர்ள், மிடில் கிளாஸ் பொண்ணு, பொசசிவ் காதலனோட காதலி, அக்காவோட குழந்தைக்கு அம்மாவா மாறுற சித்தி, அக்காவோட புருஷன்கிட்ட மாட்டிக்கிட்ட மைத்துனின்னு ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமான பெர்ஃபார்மன்ஸ்ல ச்சும்மா பின்னியிருப்பாங்க சுவலட்சுமி. அடுத்தப்படம் கார்த்திக்கோட ‘கோகுலத்தில் சீதை.’ ஆனா, அந்தப் படத்துல கமிட் ஆகுறதுக்கு முன்னாடியே தன் லா படிப்பை கன்டின்யூ பண்றதுக்காக கொல்கத்தா கிளம்பிப் போயிட்டாங்க சுவா. முதல் படமே ஓஹோன்னு பேர் வாங்கிக் கொடுத்தும், கார்த்திக் மாதிரி முன்னணி ஹீரோ அடுத்த மூவிக்கான சான்ஸ் வந்தும், ஏன் சுவலட்சுமி லா படிப்புதான் முக்கியம்னு கொல்கத்தா போனாங்க? அதுபத்தி சுவலட்சுமி கொடுத்த ஒரு பேட்டியை கேளுங்க.
’’என்னைச் சரியா புரிஞ்சுக்கிட்ட அப்பா - அம்மா இருக்கிறதால, தனிப்பட்ட ஒரு மனுஷியா நான் ரொம்ப சுதந்திரமா இருக்கேன். ஆனா, எல்லா பொண்ணுங்களுக்கும் இப்படி நடக்கிறதில்லைன்னு புரியுறப்போ மனசு வலிக்குது. சட்டம் படிச்ச ஒரு பொண்ணா இந்த உலகத்தைப் பார்க்கிறப்போ, ஐயோ இன்னும் எத்தனையோ பொண்ணுங்க படிக்காம, பொருளாதாரத்துல அடுத்தவங்களை நம்பி இருக்காங்களேன்னு வருத்தமா இருக்கு. என்னிக்கு உலகத்தோட அத்தனை பொண்ணுங்களும் படிச்சி, சொந்தக்கால்ல நிக்கிறாங்களோ அன்னிக்குத்தான் இந்த உலகத்துக்கு விடிவுகாலம் வரும்னு நான் திடமா நம்புறேன். அதனாலதான், உறுதியோட லா படிச்சேன்" அப்படினு சொன்ன சுவலட்சுமியின் பேச்சுல என்னவொரு தெளிவு பார்த்தீங்களா? பேச்சுல மட்டுமல்லீங்க, தனக்கு என்ன மாதிரியான கேரக்டர்ஸ் பொருந்தும் அப்படிங்கிறதுலயும் சுவலட்சுமி ரொம்ப ரொம்ப தெளிவான நடிகை.
இயல்புலயே சுவலட்சுமி ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர். அதுபோலவே இவங்க நடிச்ச எல்லா படங்கள்லயுமே ரொம்ப மென்மையான, அமைதியான, குடும்ப பாங்கான பெண்ணாதான் நடிச்சிருப்பாங்க. சினிமா, லா படிப்புனு எல்லாமே சரியா நடந்தும், சின்ன வயசுல சுவலட்சுமிக்கு இருந்த ஜர்னலிஸ்ட் ஆகணும்ங்கிற ஆசை மட்டும் நிறைவேறலை. ஆனா, அதையும் நிறைவேற்றிய ஆனந்த விகடன், சுவலட்சுமியை ஒருநாள் பத்திரிகையாளரா மாத்துச்சு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோட படுகொலை வழக்கை விசாரிச்சிக்கிட்டிருந்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவர் ஆர்.கார்த்திக்கேயன் ஐ.பி.எஸ் அதிகாரியை ஆனந்த விகடன் இதழுக்காகப் பேட்டி எடுத்திருந்தார் சுவலட்சுமி. இந்த நிலையில, 'ஆசை' மூவியின் அதிரி புதிரி ஹிட்டுக்கு அப்புறமா தன் லா படிப்பை கன்டின்யூ பண்ண சொந்த ஊருக்குப் போன சுவலட்சுமி, கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு 'கோகுலத்தில் சீதை' படத்துல நிலா கேரக்டர்ல நடிக்கிறதுக்காக மறுபடியும் சென்னை வந்தாங்க.
''நான் 'கோகுலத்தில் சீதை' படத்துல நடிக்கிறப்போதான் 'நாம ஒரு நடிகை'ங்கிற எண்ணமே என் மனசுக்குள்ள வந்துச்சு. அதனாலதான், அம்மாவுடன் சென்னையில செட்டிலானேன். ஆனா, கொல்கத்தாவுல கூட்டுக்குடும்பத்துல இருந்த எனக்கு சென்னையில வசிச்ச நியூக்ளியர் குடும்ப வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஷூட்டிங்ல இருக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன். ஏன்னா, என் வீடு மாதிரியே அங்க என்னை சுத்தி நிறைய பேர் இருப்பாங்களே...'' - அப்படின்னு குழந்தையைப்போல சொல்லியிருக்கிற சுவலட்சுமி, அந்தக் காலகட்டத்துல தமிழ் சினிமா ஃபீல்டை எவ்ளோ நேசிச்சிருக்காங்கன்னு இந்த வார்த்தைகள்ல நல்லா தெரியுதில்லையா?
இதுக்குப்பிறகு, சுவலட்சுமியோட சினிமா கிராஃப்ல டவுனே கிடையாதுங்க. விஜய்யுடன் நடிச்ச 'லவ் டுடே' மற்றும் 'நிலாவே வா'னு ரெண்டு படங்களுமே சுவலட்சுமிக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு. அதுலேயும் 'லவ் டுடே' சந்தியா கேரக்டர் 2கே கிட்ஸ் வரைக்கும் எல்லா பொண்ணுங்களுக்கும் ரோல் மாடல்னே சொல்லலாம். சுவலட்சுமி மேல காதல் ஆசையில விஜய் படாதபாடு படுவார் பாருங்க. அப்பப்பா... அந்த பாங்கான கேரக்டர்ல நம்ம சுவா பிரமாதமா நடிச்சிருப்பாங்க.
அந்த 'லவ் டுடே' இவரோட சினிமா ஜர்னில ரொம்ப முக்கியமான படம். 'நிலாவே வா' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கிறப்போதான் சுவலட்சுமி ஃபைனல் இயர் லா எக்ஸாமுக்கு படிச்சுக்கிட்டிருந்தாங்க. 'நீ காற்று நான் மரம்'னு அந்தப் படத்தோட பாடல்களும் செம ஹிட்டாச்சு. கூடவே லா எக்ஸாம் எழுதி வக்கீலாவும் ஆனாங்க இந்த அட்வகேட் மேடம்.
'பொன் மனம்' படத்துல கல்யாணமே பண்ணிக்காம பிரபுவின் மனைவியா ஒரே வீட்ல அவருடன் குடும்பம் நடத்துற சுவலட்சுமியின் கேரக்டர் ரொம்ப மதிப்புக்குரியதா இருக்கும். 'இனியவளே' படத்துல ஒன் சைடா காதலிக்கிற ரோல்ல, கண்கள்லயே காதல் தெரியுற அளவுக்கு தன் கேரக்டரை அவ்ளோ உணர்ந்து நடிச்சிருப்பாங்க சுவா. நடிகர் சரவணனோட 'சந்தோஷம்' படத்துல கணவன் தன்கிட்ட நூறு சதவிகிதம் உண்மையா இருக்கணும்னு எதிர்பார்க்கிற கோபக்கார மனைவி கேரக்டர். அந்தப் படத்துல, தன் வட்டக்கண்களை உருட்டி படம் முழுக்க அதகளம் செஞ்சிருப்பாங்க சுவலட்சுமி.
நடிகர் விக்ரமுடன் 'ஹவுஸ்ஃபுல்' படத்துல பூ விக்குற கலகல கேரக்டர் சுவலட்சுமிக்கு. விக்ரமோட காதல், பானையை உடைச்சிட்டு தியேட்டர் ஓனர் பார்த்திபன்கிட்ட குழந்தைத்தனமா பம்முறது, வடிவேலுவுடன் சரிக்குச் சமமா ஒரண்டை இழுக்கிறதுன்னு ச்சும்மா ஜமாய்ச்சிருப்பாங்க சுவா. அப்புறம், அருண் விஜய்யுடன் 'காத்திருந்த காதல்', 'கண்ணால் பேசவா', முரளியோட 'தினந்தோறும்' மற்றும் 'என் ஆச ராசாவே', நடிகை ரோஜாவுடன் 'பொட்டு அம்மன்', பார்த்திபனோட 'சுயம்வரம்' மற்றும் 'நீ வருவாய் என', பிரபுதேவாவோட 'ஏழையின் சிரிப்பில்', சரத்குமாரின் தங்கையா 'மாயி', சத்யராஜோட 'ஆண்டான் அடிமை'னு இவங்க நடிச்ச ஹிட் படங்களைப் பத்திச் சொல்ல பெரிய பட்டியலே இருக்கு. கே.பாலசந்தரோட 'கல்கி' படத்துல நடிகை சுவலட்சுமியாவே நடிச்சிருப்பாங்க. குறிப்பா, வட இந்திய நடிகைங்கிற அந்நிய உணர்வை தன் நடிப்பிலும் பேச்சிலும் பிரதிபலிக்காம, தமிழ்ப் பெண்ணாவே ரசிகர்களின் மனசுல ஆழமா பதிஞ்சாங்க நம்ம சுவலட்சுமி.
கன்னட நாவலான 'சந்திரகிரிய தீராடலி'யை (Chandragiriya Theeradalli) 'நதிக்கரையினிலே'ங்கிற பேர்ல தமிழ்ல படம் எடுத்தார், நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன். அதுல நாயகி ஜமீலாவா நடிச்சது நம்ம சுவலட்சுமிதான். ரெண்டு ஆண்களுக்கிடையில சிக்கிக்கிட்ட தன்முனைப்பு கொண்ட ஒரு நாயகியோட கதை. 'பெண்களைச் சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது' இந்தப் படத்துக்குக் கிடைச்சதுடன், சுவலட்சுமிக்கு நல்லப் பேரையும் வாங்கிக் கொடுத்துச்சு. பை த பை இந்தப் படம்தான் சுவலட்சுமியோட கடைசிப் படமும்கூட. இதுக்கிடையில, 2001-ம் வருஷம் சன் டிவியில ஒளிப்பரப்பான 'சூலம்' சீரியல்ல நடிச்சு தமிழ்க் குடும்பங்கள்ல ஒருவரா இடம்பிடிச்சாங்க.
இந்த நிலையில, 2002-ல தன் நீண்டகால நண்பர் 'ஸ்வாகடோ பானர்ஜி'யை கல்யாணம் பண்ணிக்கிட்டு, அமெரிக்காவுல செட்டிலானார். சுவலட்சுமியோட மிஸ்டர், ஒரு தொழிலதிபர் மாத்திரமில்லாம புரொஃபஸரும்கூட. அதனால, கணவரோட பிசினஸை சுவலட்சுமியும் கவனிச்சுக்கிட்டிருக்கார். இப்ப வரைக்கும் இந்தத் தம்பதி வெளிநாட்டுலதான் வசிக்கிறாங்க.
1995-ல ஆரம்பிச்சு 2003 வரைக்கும் முத்து முத்தா படங்களைத் தேர்ந்தெடுத்து நடிச்ச சுவலட்சுமி, ஆரம்பம் முதல் கடைசிவரைக்குமே 'நோ கிளாமர்'ங்கிறதுல தெள்ளத் தெளிவாவும் வைராக்கிய உறுதியுடனும் இருந்தாங்க. அதனாலதான், அதிகமான படங்கள்ல நடிக்கணும், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியா நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், புகழ் பெறணும்னு மட்டுமே நினைக்காம, தனக்குப் பிடிச்ச மாதிரியான ஹோம்லியான, பேசும்படியான நல்ல கேரக்டர்கள்ல நடிச்சு, மக்கள் மனசுல இடம்பிடிக்கணும்னு மட்டும்தான் நினைச்சாங்க நம்ம சுவலட்சுமி. அதனாலதான், 20 வருஷங்களா சினிமால நடிக்காம, சோஷியல் மீடியா எதுலயுமே இல்லாம இருந்தாலும், சுவலட்சுமியைத் தமிழ் மக்கள் மறக்காம இருக்காங்க.
அறிவு, அழகு, திறமை... இந்த மூணும் சேர்ந்த சுவலட்சுமியை 'எங்க இருந்தாலும் நல்லா இருங்க'ன்னு இந்த நேரத்துல வாழ்த்துவோம்.