Newzealand: மசோதாவைக் கிழித்தெறிந்த மாவோரி இன எம்.பி; பழங்குடிப் பாடல் பாடி போரா...
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு!
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது 65 வயதில் இன்று காலமாகி உள்ளார்.
இந்திரா சௌந்தர்ராஜன் 1958-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இவர் மதுரையில் வசித்து வந்தார். இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். தன்னுடைய தாயின் பெயரான 'இந்திரா'வை தன் பெயருடன் சேர்த்து இந்திரா சௌந்தர்ராஜன் என்பதை தன் எழுத்து பெயராக ஆக்கிக் கொண்டிருந்தார்.
இவர் புகழ்பெற்ற பல சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இந்து மத பாரம்பர்யம் மற்றும் புராணக் கதைகள் இவருடைய களம் ஆகும். பெரும்பாலும் இவரது கதைகளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வங்கள், மறுபிறப்பு, பேய்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும். மேலும் இவரது கதைகள் உண்மை சம்பவங்கள் அடிப்படையிலோ, அதனால் ஈர்க்கப்பட்டோ அமைக்கப்பட்டிருக்கும்.
பல சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருக்கும் இவரது 'என் பெயர் ரங்கநாயகி' நாவல் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த புதினத்திற்கான 3-வது பரிசை பெற்றது. ஒரு காலத்தில் மக்களை கட்டிப்போட்ட மர்ம தேசம், விடாது கருப்பு போன்ற சின்னதிரை தொடர்களின் கதாசிரியர் இவர்தான். மேலும் இவர் ஆனந்தபுரத்து வீடு, இருட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.
இன்னும் 3 நாட்களில் 66-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த இவர், மதுரையில் உள்ள தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு வாசகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.