Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந...
மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: தாக்கியவரின் தாய் மருத்துவர் மீது போலீஸில் புகார்!
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருபவர் பாலாஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிலிருந்தபோது புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த இன்ஜினீயர் விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து கிண்டி போலீஸார் விக்னேஷை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கத்திக் குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி, கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விக்னேஷின் அம்மா பிரேமா, கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி என்னுடைய கணவர் மனோகர் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி எனக்கு உடல் நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் 18 நாள்கள் சிகிச்சை பெற்றேன். அப்போது எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
என்னிடம் போதிய பணம் இல்லாததால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்றேன். அங்கு எனக்கு 95,000 ரூபாய் வரை செலவானது. அதனால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற பணம் இல்லாததால் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு கடந்த 10.1.2024-ம் தேதி சென்றேன். பின்னர் 14.1.2024-ம் தேதி முதல் 17.1.2024-ம் தேதி வரை என்னை அங்கு அட்மிட் செய்து எனக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு எனக்கு 14 நாள்களுக்கு ஒரு முறை ஊசி போடப்பட்டது. 5-வது ஊசி போடும் போது என்னுடைய உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதால் டாக்டர் பாலாஜியிடம் அதுகுறித்து கூறினேன். உடனே அவர், ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி ஸ்கேன் எடுத்துவிட்டு அவரிடம் காண்பித்தபோது அதை அவர் கையில் கூட வாங்கி பார்க்கவில்லை. கடந்த 15.5.2024-ம் தேதி எனக்கு உடல்நலம் சரியில்லாததால் ஒருவாரம் அங்கு அட்மிட் செய்யப்பட்டேன். அப்போது எனக்கு என்ன பிரச்னை என்று மருத்துவமனையில் யாரும் சொல்லவில்லை.
என்னுடைய உடல் நலம் மிகவும் மோசமானதால் மீண்டும் நான் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், எனக்கு 5-வது ஊசி போடும் போது என்னுடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதன்பிறகும் உங்களுக்கு ஏன் ஊசி போட்டார்கள் என்று கூறினர். இதையடுத்து வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் நோயாளியாக சிகிச்சையில் உள்ளேன். மீண்டும் ஸ்கேன் எடுக்க வடபழனிக்குச் சென்றபோதுதான் எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், என்னுடைய மகன் விக்னேஷ், கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை தாக்கிவிட்டதாகவும் நியூஸ் சேனலைப் பார்க்கும்படியும் கூறினார். நான் நியூஸ் சேனலைப் பார்த்தபோது டாக்டர் பாலாஜியை கத்தியால் என்னுடைய மகன் குத்திவிட்ட செய்தியைப் பார்த்தேன். என் மகன் அந்தமாதிரி ஆள் கிடையாது. அங்கு பணியிலிருந்த அடையாளம் காட்டக்கூடிய அரசு மருத்துவர் எனது மகனை எட்டி உடைத்ததோடு மூக்கு, வாயில் குத்தினார். என் மகன் இருதய நோயாளி என்று தெரிந்தும் மார்பிலேயே அங்கிருந்த சிலர் எட்டி உதைத்தனர். என்னுடைய மகனின் உயிரைப் பறிக்கும் நோக்கத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கிண்டி போலீஸாரிடம் கேட்டபோது, ``டாக்டரை கொலைசெய்ய முயன்ற குற்றத்துக்காக விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தற்போது விக்னேஷை தாக்கியதாக அவரின் அம்மா பிரேமா தரப்பில் எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. அதையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.
இதற்கிடையில் கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்குக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.