வழக்கறிஞர் கொலையில் கூலி பாக்கி; உ.பி போலீஸில் புகாரளித்த கூலிப்படைத் தலைவன்!
உத்தரப்பிரதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த கூலிப்படைத் தலைவன், கொலைக்கான மீதி கூலித் தொகையை பெற்றுத் தருமாறு, மீரட் நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிர்ச்சியளிக்கும் விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள உமேஷ் விகாஸ் காலனியைச் சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் அஞ்சலி. இவர், கடந்தாண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி வீட்டுக்கு அருகேயுள்ள பால் பூத்துக்குச் சென்று பால் வாங்கி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணவரை விவாகரத்து செய்து விட்டு, கணவருக்குச் சொந்தமான வீட்டிலேயே வழக்கறிஞர் அஞ்சலி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், அஞ்சலியின் கணவரான நிதின் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்த போலீஸார், பின்பு நிதின் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினரை வழக்கில் இருந்து விடுவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் கூலிப் படைத் தலைவன் நீரஜ் சர்மா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸாரின் விசாரணையில், கணவரை விவாகரத்து செய்து விட்டு கணவருக்குச் சொந்தமான வீட்டிலேயே வழக்கறிஞர் அஞ்சலி வசித்து வந்துள்ளார். அஞ்சலி வீட்டைக் காலி செய்ய மறுத்ததால், அஞ்சலியின் கணவரான நிதின் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டை யாஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியா ஆகியோருக்கு விற்றுள்ளனர்.
வீட்டை வாங்கியவர்கள், வழக்கறிஞர் அஞ்சலியிடம் தாங்கள் அந்த வீட்டை வாங்கி விட்டதாகவும், அதனால் வீட்டை காலி செய்து தருமாறும் கேட்டுள்ளனர். ஆனால், அஞ்சலி வீட்டை காலி காலி செய்ய மறுத்து, அவர்களிடமும் தகராறில் ஈட்டுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கூலிப்படைத் தலைவன் நீரஜ் சர்மா உதவியை நாடி, கூலிப்படை மூலம் பெண் வழக்கறிஞர் அஞ்சலியை சுட்டுக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் சிறையில் இருந்த கூலிப்படைத் தலைவனான நீரஜ் சர்மா, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, நேராக மீரட் நகர் காவல் நிலையத்துக்குச் சென்ற நீரஜ் சர்மா, வழக்கறிஞர் கொலையில் தனக்கு வர வேண்டிய பாக்கி கூலித் தொகையை பெற்றுத் தருமாறு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகாரில், வழக்கறிஞர் அஞ்சலியைக் கொலை செய்ய அவரது கணவர் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் தருவதாகக் கூறி, ரூ. 1 லட்சம் மட்டுமே முன்பணமாக தந்தனர் என்றும், பின்னர் கொலைச் சம்பவத்துக்குப் பின் தான் சிறை சென்றதால் மீதித் தொகையை வாங்க முடியவில்லை என்றும், தற்போது, சிறையில் இருந்து வந்து, மீதி ரூ.19 லட்சத்தை கேட்டால், தர மறுக்கின்றனர். எனவே, நான் செய்த கொலைக்கான மீதி கூலித் தொகையைப் பெற்றுத் தருமாறு தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அஞ்சலியின் கணவரான நிதின் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினருடன், அவர் பேசிய தொலைபேசி உரையாடல் ஆதாரங்களையும் போலீஸாரிடம் அளித்துள்ளார்.
மேலும், அஞ்சலியைக் கொலை செய்தால் ரூ. 20 லட்சம் மற்றும் டி.பி நகரில் உள்ள 5 கடைகளையும் தருவதாக ஒப்புக் கொண்டதால்தான் நாங்கள் அஞ்சலியின் கணவர் நிதின் குப்தா, மாமியார் சரள் குப்தா, மாமனார் பவன் குப்தா மற்றும் தயானந்த சர்மா உள்ளிட்டோர் பெயரை குறிப்பிடாமல், நாங்களே வீடு தொடர்பான பிரச்னையில் கொலை செய்ததாக தெரிவித்தோம். ஆனால், தற்போது வழக்கறிஞர் அஞ்சலி கொலை செய்யப்பட்டப் பிறகு அவர்கள் எங்களையே மீதித் தொகையை தராமல் ஏமாற்றி விட்டதால், நாங்கள் எங்கள் தவறை உணர்ந்து இந்த உண்மைகளைத் தெரிவிக்கிறோம் என போலீஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், வழக்கறிஞர் அஞ்சலி கொலை வழக்கில், அவரது கணவர் நிதின் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, மீண்டும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
கூலிக்காக கொலை செய்த கூலிப்படைத் தலைவனே, பாக்கி கூலியை கேட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் விநோத சம்பவம் போலீஸார் மட்டுமன்றி, உத்தரப்பிரதேசத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.