Bitcoin விலை ஏறுமா, இறங்குமா இனி நாமே கணிக்கலாம்... எப்படி? | IPS FINANCE | EPI ...
`திருமணத்திற்கு மறுத்ததுதான் காரணமா?'- அரசு பள்ளி ஆசிரியை கொலையில் நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகள் ரமணி (25) எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவரை மதன்குமார் என்பவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இத்தகைய வன்முறையை அனைத்துத் தரப்பினரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் அந்தப் பகுதி மக்களிடம் பேசியதில் அவர்கள் தெரிவித்த தகவல்கள் இதோ
ரமணி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரின் மகன்தான் மதன்குமார் (28) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். மதன்குமாரும், ரமணியும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மதன்குமார் சிங்கப்பூர் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மதன்குமார் ஊருக்கு வந்துள்ளார். ரமணிக்கும் அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்துள்ளது. இருவரும் எப்போதும் போல் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்ததுதான் என்கின்றனர்.
தங்களை விட வசதி குறைவானவர்கள் என்றபோதும் மகள் ஆசைப்படுகிறாள் என்பதற்காக திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறார் ரமணியின் அப்பா. முறைப்படி மதன்குமார் வீட்டில் பெண் கேட்டுள்ளனர். பின்னர், ரமணியின் பெற்றோர் இருவருக்கும் ஜாதகம் பார்த்துள்ளனர்.
இந்தச் சூழலில், ரமணியின், குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு அவரை மதன்குமாருக்கு திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை எனவும், இதை ரமணியின் அப்பாவிடம், அவன் பழக்க வழக்கம் சரியில்லாதவன், சில தவறான செயல்களில் ஈடுபடுகிறான் என சொல்லியதாகச் சொல்கின்றனர். இதைத்தொடர்ந்து, ரமணியின் அப்பா, 19ம் தேதி இரவு மதன்குமார் பெற்றோரை அழைத்து உங்க மகனுக்கும், எங்கள் மகளுக்கும் ஜாதகப் பொருத்தமில்லை. எனவே திருமணம் செய்து கொடுக்க முடியாது. இனி பெண் கேட்டு எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கூறியுள்ளார்.
இதை, மதன்குமாரின் அப்பா, மதனிடம் தெரிவித்திருக்கிறார். இதன் பிறகு மதன், யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். காலையில் ரமணி பள்ளிக்கு வந்த பிறகு நேரில் போய் கேட்டு கொள்வோம் என முடிவெடுத்து, ஒரு வேளை முடியாது என சொல்லிவிட்டால், ரமணியைக் கொலை செய்து விட்டுத் தானும், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் தான் அவர் சென்றிருக்கிறார் என்கின்றனர்.
எதுக்கு திருமணம் வேண்டாம் என்கிறார்கள், இதில் உனக்கும் சம்மதமா என மதன் கேட்க, ரமணி, ``உன்னை ஸ்கூலுக்கு யார் வர சொன்னது, இங்கிருந்து கிளம்புறியா இல்லை என் அப்பாவை அழைக்கவா" எனக் கேட்டதாகத் தெரிகிறது. உடனே ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் ஓங்கி குத்திக் கொலை செய்திருக்கிறார் பின்னர் தப்பித்து சென்ற போது போலீஸ் அவரைப் பிடித்து விட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து பள்ளியை ஆய்வு செய்த, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக், இருவருக்குமான கருத்து வேறுபாட்டால் இந்த கொலை நடந்துள்ளது. ஆசிரியர்கள் ஓய்வறையில் தான் கொலை நடந்துள்ளது. பள்ளியில் காவலாளி இல்லை. கதவு திறந்து உள்ளது. ஏற்கனவே, தெரிந்த நபர் என்பதால், யாரையும் கேட்காமல், மதன்குமார் நேராக பள்ளிக்குள் சென்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது எனத் தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ``அமைச்சராக நான் ஒரு வேண்டுக்கோள் வைக்கின்றேன். இது போன்று காட்டுமிராண்டித் தனமாக நடந்துக் கொள்பவர்களுகாக வக்கீல்கள் யாரும் வாதாட வரக்கூடாது, ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், நீதிபதிகள் தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அன்பில் மகேஸை, ``எங்கள் மகளை இந்த நிலையில் பார்க்கவா, படிக்க வைத்து ஆளாக்கினோம். ஆசிரியராகி விட்டார், இனி அவரது வாழ்க்கையில் துன்பமிருக்காதுனு நினைத்தோம். ஆனால் அவள் உயிரை எடுப்பதற்கு பக்கத்திலேயே எமன் இருந்துள்ளான் இது எங்களுக்கு தெரியாமல் போச்சே" எனக் கதறினர். காதலித்த ஒரு பெண்ணை கொலை செய்ய முற்படுவது, அந்தப் பெண்ணிடம் வன்முறையாக நடந்து கொள்வது கடுமையான தண்டனைக்குரியது. அதை எந்தவித காரணத்தாலும் நியாயப்படுத்துவது முறையாகாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமலிருக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.