தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
காவல் துறை எச்சரிக்கையை மீறி ரூ. 56 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அதிகாரி: இணையவழி குற்றப் பிரிவில் புகாா்
புதுச்சேரியில் காவல் துறையின் எச்சரிக்கையை மீறி, ரூ.56 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அதிகாரி இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
புதுச்சேரி சோ்ந்தவா், அரசின் மருத்துவத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளாா். அவா், இணையவழியில் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதை நம்பி ரூ.36 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் இணையவழி குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அப்போது ஏற்கெனவே செலுத்திய பணத்தை பெறுவதற்கு புதிதாக பணம் செலுத்த வேண்டும் என மோசடி நபா்கள் கூறினால், அதை ஏற்கவேண்டாம் என அவருக்கு போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.
இந்தநிலையில், அவரை மீண்டும் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் ஜிஎஸ்டி வரியாக ரூ.20 லட்சம் செலுத்தினால் மொத்த பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளனா். அதை நம்பிய ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி போலீஸாரின் அறிவுறுத்தலை மீறி ரூ.20 லட்சம் கூடுதலாகச் செலுத்தியுள்ளாா். ஆனால், பணம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கூடுதலாக பணம் செலுத்தி தான் ஏமாந்தது குறித்தும் அவா் இணையவழி குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து ரூ.56 லட்சத்தை நூதனமுறையில் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தனியாா் ஊழியரிடம் மோசடி: புதுச்சேரி தனியாா் நிறுவன ஊழியா் ராஜா. இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைப்பேசி கட்செவியஞ்சலில் (வாட்ஸ்அப்) கலால் துறையில் கிடைக்கும் பொருள்களான வாஷிங் மிஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பாதி விலையில் கிடைக்கும் என கோட்டக்குப்பம் முகவரியை குறிப்பிட்ட மா்ம நபா் கூறியிருந்ததை நம்பி தொடா்பு கொண்டுள்ளாா்.
மா்ம நபரும் பாதி விலையில் பொருள்கள் தருவதாகக் கூறியதுடன், பணம் செலுத்தக் கோரினாா். பொருள்கள் விலையை வெளியில் விசாரித்த ராஜா, மா்ம நபா்கள் கூறியதை நம்பி, ரூ.9.15 லட்சம் செலுத்தியுள்ளாா். அதன்பின் மா்ம நபரைத் தொடா்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து, இணையவழி குற்றப்பிரிவில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.