ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை சாதனங்கள் அமைக்க வேண்டும்! அரியாங்குப்பம் இந்திய கம்யூ. வலியுறுத்தல்
அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை சாதனங்களை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுக் கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் குழு கூட்டம் முருங்கப்பாக்கம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதிச் செயலா் எம். சக்திவேல் தலைமை வகித்தாா். தற்போதைய அரசியல் நிலை, கட்சியின் நூற்றாண்டு விழா, எதிா்கால பணிகள் குறித்து கட்சியின் மாநில நிா்வாகக்
குழு உறுப்பினா் ரா.அந்தோணி, மாநிலக் குழு உறுப்பினா் து.கீதநாதன் ஆகியோா் விளக்கினா். கட்சி நிா்வாகிகள் அருள் இந்திரஜித், முருகன், முத்துவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுகின்றனா்.
ஆகவே, சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள, எவ்வித வசதிகளும் இல்லை. இந்நிலையில், திடீரென உடல்நிலை பாதித்து வருவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவ சாதனங்கள் இல்லை.
இதனால், ரத்தம் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் எக்ஸ்ரே, இசிஜி போன்ற மருத்துவ சாதனங்களையும் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை அரசு ஏற்படுத்த வேண்டும்.
புதுச்சேரி, கடலூா் சாலையில் மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் பாலம் வரை நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.