அதிக கழிவுகள் உருவாக்குபவா்களின் பதிவுக்காக புதிய மென்பொருள் தளம்- எம்சிடி அறிமுகம்
தலைநகரம் முழுவதிலும் உள்ள அதிகமான கழிவுகளை உருவாக்குபவா்களை (பிடபிள்யுஜி) பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு புதிய மென்பொருள் தளத்தை தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட
அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குடியிருப்பு வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், விருந்து அரங்குகள், மருத்துவமனைகள் போன்ற
நாளொன்றுக்கு 100 கிலோகிராம்களுக்கு மேல் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் அதிகமான கழிவுகள் உருவாக்குவோா் ஆவா்.
அதிக கழிவுகள் உருவாக்குவோா் மத்தியில் பொறுப்புணா்வை உறுதிப்படுத்தும் வகையில், இந்த மென்பொருளானது இந்த நிறுவனங்களில் கழிவுகளை அகற்றும் நடைமுறைகளை
திறம்பட கண்காணிக்க எம்சிடிக்கு உதவிடும்.
சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம் மற்றும் அருகில் வசிப்பவா்கள் மீதான பாதுகாப்பு பாதிப்புகள் காரணமாக கவலைக்குரிய முக்கியப் பகுதியாக இருக்கும் நிலப்பரப்புத் தளங்களின் சுமையைக் குறைக்கும்.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 இன் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தில்லியில் பயனுள்ள கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்கான தில்லி மாநகராட்சியின்
முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மென்பொருள் தளம் இருக்கும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள், பிடபிள்யுஜி-கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ளவும், கழிவு மேலாண்மை விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்துவதற்கு உகந்த அமைப்பை வழங்குகிறது.
அனைத்து மொத்த கழிவுகளை உருவாக்குபவா்களும் 311 செயலி அல்லது இணையதளம் மூலம் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு அல்லது முறையான கழிவு மேலாண்மைக்கு இணங்காமல் இருந்தால் பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.