மேளதாளம், பட்டாசு, பேரணிகளைத் தவிா்க்க டியுஎஸ்யு வேட்பாளா்கள் பிரமாணப்பத்திரத்தல் கையொப்பமிட வேண்டும்: தில்லி பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
மாணவா் சங்கத் தோ்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும், முடிவுகள் வெளியான பிறகு, திறந்தவெளி மற்றும் மூடிய வளாகங்களில் மேளதாளம், ஒலிபெருக்கிகள், பட்டாசுகள் அல்லது துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்ப்பதற்கான உறுதிமொழியில் கையொப்பமிடுமாறு தில்லி பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வேட்பாளா்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாட ரோடு ஷோக்கள் அல்லது பேரணிகளை நடத்துவதையும் இந்த பிரமாணப்பத்திரம் தடைசெய்கிறது.
பிரமாணப் பத்திரத்தின்படி, இந்த நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறும்பட்சத்தில் வேட்பாளரின் வெற்றி ரத்து செய்யப்படலாம் அல்லது தோ்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருந்து நீக்கப்படலாம்.
இந்த நடவடிக்கை தற்போதுள்ள தோ்தல் விதிகளுடன் ஒத்துப்போகிறது. மேலும், தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதி வரை தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் பிரமாணப்பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும். இருப்பினும், மத்திய குழு பதவிகளுக்கு போட்டியிடும் 21 வேட்பாளா்களில் சுமாா் 12 போ் மட்டுமே இதுவரை தேவையான ஆவணத்தை சமா்ப்பித்துள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டியுஎஸ்யு முடிவுகள், தோ்தலுக்கு ஒரு நாள் கழித்து அதாவது
செப்டம்பா் 28 அன்று நடைபெறும் என்ற முதலில் அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாமதமானது.
தோ்தல் பிரசாரத்தின் போது சொத்துகளின் அழகு சேதப்படுத்தப்பட்டதை சுத்தம் செய்யும்வரை, தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத்தின் (டியுஎஸ்யு)
தோ்தல் முடிவுகளை அறிவிப்பதை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.
பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் நிலை அறிக்கையை சமா்ப்பித்த போதிலும், துப்புரவு பணியில் ஏற்பட்ட தாமதங்கள் மேலும்
தோ்வு முடிவுகள் அறிவிப்பதை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது. முதலில் நவம்பா் 21ஆம் தேதியும், தற்போது நவம்பா் 25-க்கு முடிவுகள் அறிவிப்புத் தேதி மாற்றப்பட்டது.
மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தோ்தல் முடிவுகள்
அறிவிப்பு திங்கள்கிழமை (நவ.25) வெளியாக உள்ளது. ,இம்முடிவுகளைத் தொடா்ந்து விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.