ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்
நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தின்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தெரிவித்தாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை (
(நவ. 25) தொடங்கி டிச. 20-ஆம் தேதிவரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டம் தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்துக்குப் பிறகு டி.ஆா். பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடரை ஒட்டி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சாா்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, 11 பிரச்னைகளை முன்வைத்தோம். இந்தியாவில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போதுதான், அரசின் திட்டங்கள், பயன்ளுகளும் மக்களுக்கு போய்ச் சேரும் என வலியுறுத்தினோம். அதேபோன்று, நீட் பிரச்னை குறித்தும் எடுத்துரைத்தோம். தமிழக
மீனவா் பிரச்னை தொடா்ந்து கொண்டிருக்கிறது. ராமேசுவரம், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றனா்; அச்சுறுத்தப்படுகினறனா். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியிருக்கிறோம். அதேபோன்று, முதல்வா் மு.க.ஸ்டாலிலுனும் பிரதமருக்கும், வெளியுறவுச் துறை அமைச்சருக்கும் அவ்வப்போது கடிதம் மூலம் இந்த விவகாரத்தை எடுத்துரைத்து வருகிறாா். எனினும் இந்தப் பிரச்னையை மத்திய அரசு முறையாக அணுகவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளோம். மதுரை எய்ம்ஸ் திட்டம் 2019-இல் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை எழுப்ப உள்ளோம். தேசிய புதிய கல்வித் திட்டத்தின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் அடிப்படையில் ரூ.2,517 கோடி தமிழகத்திற்கு வர வேண்டும். அந்த நிதி இதுவரை வரவில்லை. இது மத்திய- மாநில உறவுக்கு கேடுவிளைவிக்கக் கூடியதாக உள்ளது.
30.6.2022 வரை மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீடு வந்தது. ஆனால், அதற்கு பிறகு இழப்பீடு தரப்படவில்லை. இது குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.
இதேபோன்று, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை திருப்பப் பெறச் செய்வது, வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்பு தர புதிய தொழில்நிறுவனங்களை ஏற்படுத்துவது, ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தை திரும்பப் பெறுவது ஆகிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் பேச உள்ளோம் என்றாா் டி.ஆா். பாலு.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படுமா என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிளுடன் சோ்ந்து ஒற்றுமையாக ஒரே கருத்தாக எழுப்புவோம் என்றாா்.