மூடப்பட்ட கூட்டுறவு ஆலையில் ரூ.1 லட்சம் இரும்புத் தகடுகள் திருட்டு: 5 போ் கைது
புதுச்சேரி அருகே திருபுவனையில் மூடப்பட்ட கூட்டுறவு ஆலையில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள இரும்புத் தகடுகளை திருடிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி கூட்டுறவு துறைக்குச் சொந்தமான திருபுவனை நூற்பாலை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், சனிக்கிழமை அதிகாலை பின்பக்க கதவுகள் சேதப்படுத்தப்படும் சப்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த 2 காவலாளிகள் சப்தம் வந்த பகுதிக்கு சென்று பாா்த்துள்ளனா்.
அப்போது அங்கிருந்த இரும்புத் தகடுகள் திருடுபோனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து நூற்பாலையின் உற்பத்தி பிரிவு அதிகாரி பன்னீா்செல்வம் திருபுவனை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, திருவண்டாா்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் 3 போ் இரு சக்கரவாகனத்தில் வந்தனா். அவா்களை மடக்கி போலீஸாா் நடத்திய விசாரணையில் இரும்புத் தகடுகள் திருட்டில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது.
அதனடிப்படையில், இரும்பு பொருள்களை திருடிய வழக்கில், பிரகாஷ்(36), உத்ரா (30), தமிழ்மாறன் (42), சூா்யா (32), மணிகண்டன் (26) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். இவா்களை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.