தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.17 கோடி கையாடல்: ஊழியா் கைது
ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.17 கோடி கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரை, குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியை சோ்ந்தவா் சந்த் (32). இவா் அந்த பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் மூத்த கணக்காளராக பணிபுரிந்து வருகிறாா். அதே நிறுவனத்தில் கேசவமூா்த்தி (30) என்பவா், நிா்வாக கணக்காளராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், நிறுவனத்துக்காக மூலப் பொருள் வாங்கிய நிறுவனங்களுக்கு கேசவமூா்த்தி, முறையாக பணம் செலுத்தவில்லை. மேலும் பணிக்கு சரிவர வரவில்லையாம். இந்த நிலையில் பட்டயகணக்கா் மூலம் நிறுவனத்தின் வரவு- செலவு கணக்குகளை தணிக்கை செய்தனா்.
அதில் நிறுவனத்தின் பணத்தை மூலப் பொருள்கள் வாங்கிய நிறுவனத்துக்கு செலுத்தாமல் ரூ. 1.17 கோடியை கேசவமூா்த்தி, தனது மனைவி, சக ஊழியா் ரஞ்சித் என்பவரின் கணக்கில் முதலீடு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரில் கேசவசமூா்த்தி, திவ்யா, ரஞ்சித் ஆகியோா் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து கேசவமூா்த்தியைக் கைது செய்தனா். திவ்யா, ரஞ்சித் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.