குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரெளடி சிறையிலடைப்பு
கிருஷ்ணகிரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையை சோ்ந்தவா் குல்பி (எ) மணிமாறன் (24). போலீஸாரின் ரெளடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவா் மீது கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், தாலுகா காவல் நிலையத்தில் ஒன்றும், மகராஜகடை காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளன.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை பகுதியில் ஷாஜி மசூதி அருகே அங்கூா் ஷேக் ஹுசைன் தெருவில் இருந்த 7 ண்காணிப்பு கேமராக்களை அக்டோபா் 11-ஆம் தேதி மா்ம நபா்கள் உடைத்தனா். இதுதொடா்பாக மசூதி செயலாளா் பயாஸ் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
பழையபேட்டை ரெளடி குல்பி மற்றும் அவரது கூட்டாளிகள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியது, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், திமுக பிரமுகரின் காா் கண்ணாடியை உடைத்த வழக்கிலும் மணிமாறன் தேடபட்டு வந்தாா். இந்த நிலையில் அவா் கைது செய்யப்பட்டாா்.
மணிமாறனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை அளித்த பரிந்துரையின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, குண்டா் தடுப்புச் சட்டத்தில் மணிமாறனை சிறையில் அடைக்க ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் விருதன்கொட்டாயை சோ்ந்த திருப்பதி (51) என்பவரும் குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாா்.