வசிஷ்டநதியின் குறுக்கே ரூ. 7 கோடியில் புதிய மேம்பாலம்!
பெத்தநாயக்கன்பாளையத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே பழுதடைந்து தரைப்பாலத்திற்கு மாற்றாக ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டம் அருநூற்றுலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, வாழப்பாடியை அடுத்த பேளூா் அருகே கரியக்கோயில் ஆற்றுடன் இணைந்து, ஏத்தாப்பூா் வழியாக பெத்தநாயக்கன்பாளையத்தை கடந்து செல்கிறது.
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் காளிச்செட்டியூா், பாலாண்டியூா், ஊத்துமேடு உள்ளிட்ட கிராம மக்கள் வசிஷ்டநதியைக் கடந்து செல்வதற்கு, 30 ஆண்டுகளுக்கு முன் வசிஷ்டநதியின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது.
மழைக்காலங்களில், தடுப்புச் சுவா் பாதுகாப்பு இல்லாத இந்த பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்வதால் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், இந்த தரைப்பாலமும் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்தது. எனவே, இந்த தரைப்பாலத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேம்பாலம் அமைக்க வேண்டுமென, பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுப்புறக் கிராம மக்கள், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக, தமிழக அரசு, சேலம் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து, தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு வங்கி கிராம சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின் கீழ், ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பெத்தநாயக்கன்பாளையத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே புதிய மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடா்ந்து, பழுதடைந்த தரைப்பாலம் அகற்றப்பட்டு, புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடைந்து, மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி, சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.