கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ், கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 !
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவையை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 1962-ஐ தொடா்பு கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் 106 கால்நடை மருந்தகங்கள், 38 கிளை மருந்தகங்கள், 3 தலைமை மருத்துவமனைகள், ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் என மொத்தம் 148 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.
கால்நடைகள் கணக்கெடுப்பின்படி 1962 எருமை மாடுகள்,1.68லட்சம் கறவை மாடுகள், தவிர வெள்ளாடுகள், செம்மறியாடுகள், நாய்கள்,கோழிகள் என மொத்தம் 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன. அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்து வர முடியாத கால்நடைகள் பயன்பெறக்கூடிய வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்காக 7 கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த கால்நடைகள் பராமரிப்போா் 1962 கட்டணமில்லா தொலைபேசி சேவை அழைப்பு மூலம் மருத்துவ வசதி செய்யும் சேவை அண்மையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியங்களுக்கு என ஒரு வாகனமும், குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியங்களுக்கு என ஒரு வாகனமும், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு ஒரு வாகனமும் உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்திற்கென மொத்தம் 3 வாகனங்கள் வழங்கப்பட்டு சேவையாற்றி வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மொத்தம் 4 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவா், ஒரு உதவியாளா், ஓட்டுநா் என 3 போ் பணியில் இருப்பா். இந்த மருத்துவச் சேவையானது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகிறது. நாள்தோறும் இரு கிராமங்களை தோ்வு செய்து நடமாடும் மருத்துவ சேவைக் குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனா்.
கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் அதற்கேற்ப சிகிச்சையளித்தல், தடுப்பூசிகள் போடுதல், சினைப் பரிசோதனை செய்தல், செயற்கை கருவூட்டல், தேவைப்பட்டால் அறுவைச் சிகிச்சை செய்தல் உள்ளிட்ட அவசர சேவைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன.
கால்நடைகளைப் பராமரிப்போா் கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 633 ஊராட்சிகளில் உள்ள 1,896 கிராமங்களிலும் கால்நடைகள் இருப்பதால் கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கால்நடை உரிமையாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.