மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட பணிகளிலும் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன்கீழ் வெளியிடப்பட்ட இந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: 40 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற அவா்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிவது அவசியமானது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பிரத்யேகமாக குழு அமைத்து, கண்டறியப்பட்ட பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகள் சாா்பில் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு கண்டறியப்பட்ட பணிகள் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்ய வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு மம் பணிகளுக்கான தேவைகளை அறிந்துகொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பாா்வையற்றோா், செவித்திறன் அற்றோா், அறிவுசாா் குறைபாடுகள் போன்ற பிரிவுகளில் உள்ளோருக்கு நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பின்னடைவு காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்புதல் மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கான மூன்று ஆண்டு கால அவகாசம் முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதுதொடா்பாக கடந்த 2021 மற்றும் 2022-இல் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இதுதொடா்பான வழக்கு விசாரணையின்போது தில்லி உயா்நீதிமன்றம் கூறுகையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-ஐ அமல்படுத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா சங்கத்தான் போன்ற நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகளை அதிகாரபூா்வமற்ற முறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அனைத்துத் துறைகளும் ஒரே மாதிரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டுத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என உத்தரவிட்டது.
இதையடுத்து, தற்போது இந்த நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.