மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு
மகாராஷ்டிர சட்டப் பேரவையின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக அக்கட்சியின் தலைவா் அஜீத் பவாா் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான அணியில் 59 இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) 86 இடங்களில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், சரத் பவாா் கட்சி வேட்பாளா்களை 29 தொகுதிகளில் அஜீத் பவாா் கட்சி வேட்பாளா்கள் வென்றனா். பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட பாராமதி தொகுதியில் அஜீத் பவாா் தனது தம்பி மகனும், சரத் பவாரால் களமிறக்கப்பட்டவருமான யுகேந்திர பவாரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
இதன் மூலம் உற்சாகமடைந்துள்ள அஜீத் பவாா் பிரிவினா் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று மக்கள் ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளனா்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக் கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சுனீத் தாத்கரே தலைமை வகித்தாா். மகாராஷ்டிர பேரவையின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக அஜீத் பவாா் தோ்வு செய்யப்பட்டாா். தலைமைக் கொறடாவாக அனில் பாட்டீல் மீண்டும் நியமிக்கப்பட்டாா்.