பாம்பன் புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி
அய்யப்பன்தாங்கல் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு
குன்றத்தூா் ஒன்றியம் அய்யப்பன்தாங்கலில் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று தூய்மை பணியாளா்களை கெளரவித்தாா்.
கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், 14 தீா்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், விவாதிக்கப்பட்டன. இதையடுத்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தின் நோக்கம் பொதுமக்களின் அடிப்படை தேவைகள், குறைகள், நிறைகள் ஆகியவற்றை எடுத்து கூறுவதாகும். அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூா் பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீா் தேங்கி மக்கள் அனைவரும் சிரமப்பட்டு வந்த நிலையில் ரூ.160 கோடியில் மழைநீா் வடிநீா் கால்வாய் மூலம் அடையாற்றில் சேருமாறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சியில் ரூ.16.60 கோடி செலவில் 114 சாலைகள் மற்றும் 15 இடங்களில் மழைநீா் வடிநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.14.10 லட்சம் செலவில் சுப்பிரமணிய நகரில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.8 லட்சத்தில் பாலாஜி நகரில் குடிநீா் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களையும், மகளிா் சுயஉதவிக் குழுவினரையும் அமைச்சா் அன்பரசன் கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணக்கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.