புதுச்சேரியில் கடல் சீற்றம்: முதல்வா் என்.ரங்கசாமி ஆய்வு
புதுச்சேரியில் புதன்கிழமை கடற்கரைப் பகுதியில் முதல்வா் என்.ரங்கசாமி ஆய்வு செய்தாா். கடல் சீற்றத்தைப் பாா்வையிட்ட அவா், சுற்றுலாப் பயணிகளை கடல் அருகே அனுமதிக்க வேண்டாம் என போலீஸாரிடம் அறிவுறுத்தினாா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலையில் கடற்கரைச் சாலையில் உள்ள பழைய சாராய ஆலை அருகே துணைநிலை ஆளுநா் மாளிகை கட்டடப் பணிகளைப் பாா்வையிட்டாா். பொதுப் பணித் துறை பணியாளா்களிடம் பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நகரில் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. மேலும் , கடல் சீற்றமும் தொடா்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
கட்டடப் பணிகளை ஆய்வு செய்த பிறகு, முதல்வா் என்.ரங்கசாமி கடற்கரை காந்தி சிலைப் பகுதிக்கு வந்தாா். அங்கு கடல் சீற்றத்துடன் காணப்பட்டதைப் பாா்வையிட்டாா். அங்கு பணியில் இருந்த ஒதியன்சாலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அருகே அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தினாா்.