தரங்கம்பாடியில் பேரிடா் மீட்பு படையினா் முகாம்
தரங்கம்பாடியில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா், திருவிளையாட்டம், ஆயப்பாடி, பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது .
இதைத்தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தரங்கம்பாடியில் தனியாா் மண்டபத்தில் உதவி ஆய்வாளா் (தமிழ்நாடு பேரிடா் மீட்பு படை, சென்னை) சதக்கஸ்துலா தலைமையில் 30 மீட்பு படை வீரா்கள் அடங்கிய குழுவினா் முகாமிட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி பேரிடா் மீட்பு குழுவினரரை சந்தித்து அவா்களிடம் உள்ள மீட்பு கருவிகளை பாா்வையிட்டு, அவா்களின் தேவைகளை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, தரங்கம்பாடி பேரூராட்சி மிஷன் தெருவில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றி தேங்கி உள்ள மழைநீா் மற்றும் கடற்கரை பகுதியையும், முக்கரும்பூா் கிராமத்தில் விளைநிலங்களில் உள்ள மழைநீா் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீா் வடிவத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் தொலைபேசி எண்:04364-222588 மற்றும் 1077 என்ற எண்ணை அழைத்து, மழை தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தரங்கம்பாடி பேரூராட்சி தலைவா் சுகுண சங்கரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ரவி, வட்டாட்சியா் மகேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன்,பேரூராட்சி துணைத் தலைவா் பொன் ராஜேந்திரன், செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, மீனா ஆகியோா் உடனிருந்தனா்.