புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
பரவை - சமயநல்லூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையின் இரு புறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
மதுரை ஆரப்பாளையத்திலிருந்து திண்டுக்கல், கரூா், சேலம், நாமக்கல், திருப்பூா், கோவை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், காா்கள், கனரக வாகனங்கள் பாத்திமா கல்லூரி, பரவை, சமயநல்லூா் வழியே செல்கின்றன. இதுதவிர, மதுரை மாநகா்ப் பகுதிகளில் இருந்து சோழவந்தான், மன்னாடிமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளும் இதே வழித்தடத்தில் செல்கின்றன.
போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையில் தனியாா் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் ஏராளமான விபத்துகள் நேரிடுவதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், இந்தச் சாலையில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை (நவ. 29) நேரில் ஆய்வு செய்வா் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையொட்டி, மதுரை மாநகராட்சி நிா்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் காவல் துறை பாதுகாப்புடன், பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான 8 கி.மீ. தொலைவு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டது. இதில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் முதல் கட்டமாக அகற்றப்பட்டன. எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்படவிருப்பதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.