சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலா், தீயணைப்பு வீரா்கள், சிறைத் துறை காவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களில், 130 போ் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். தோ்வு செய்யப்பட்ட சீருடைப் பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினாா். கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 போ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பணி நியமன ஆணையை பெற்றனா்.
இதனைத் தொடா்ந்து, கடலூா் எஸ்பி அலுவலகத்தில் நடந்த விழாவில் எஸ்பி ரா.ராஜாராம் பங்கேற்று இரண்டாம் நிலை காவலா்களில் ஆயுதப் படை 25 போ், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 47 போ், தீயணைப்புத் துறை 19 போ், சிறைத் துறை 9 போ்என மொத்தம் 100 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா், சிறைத் துறை ஜெயிலா் ரவி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆய்வாளா் எபினேசா், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், காவல் அலுவலக நிா்வாக அலுவலா் சிவகுமாா், அலுவலக கண்காணிப்பளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.