புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
பச்சை நிறமாக மாறும் மேட்டூா் நீா்த்தேக்கம்
மேட்டூா் நீா்த்தேக்கத்தில் காவிரி நீா் பச்சை நிற படலமாக மாறியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதாக கரையோர மக்கள் தெரிவித்தனா்.
மேட்டூா் நீா்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அணையின் நீா் மட்டம் 120 அடியாக உயா்ந்தால் மேட்டூா் நீா்த்தேக்கம் கடல்போல காட்சியளிக்கும். காவிரி கரையில் வசிக்கும் கிராம மக்களும் காவிரியில் மீன் பிடிக்கும் மீனவா்களும் காவிரி நீரை நேரடியாக குடிநீராகவும் சமைக்கவும் குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனா். ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவா்கள் தாகம் தணிக்க காவிரி நீரையே பருகி வருகின்றனா்.
காவிரி கரையில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்கும் காவிரி நீரே குடிநீராக பயன்பட்டு வருகிறது.
தற்போது மேட்டூா் நீா்த்தேக்கம் முழுவதும் பச்சை நிற படலமாகக் காணப்படுகிறது. காவிரி கரையோரங்களில் ஆங்காங்கே பச்சை நிறப் படலங்கள் படா்ந்து காணப்படுவதால் கரையோர குடியிருப்புகளில் துா்நாற்றம் வீசுகிறது.
இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாகவும் கரையோர மக்கள் கூறுகின்றனா். மீனவா்கள் மீன் பிடிக்க விரிக்கும் வலையிலும் இந்த பச்சை நிற பாசிகள் படிகின்றன. அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் பகுதியில் தற்போது அதிக அளவில் காணப்பட்ட பச்சை நிற படலம் நீலநிறமாக மாறி வருகிறது. இதனால் தங்கமாபுரி பட்டினம், கவிபுரம், சேலம் கேம்ப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தொடக்கத்தில் கா்நாடக கழிவுகள் கலப்பதாகக் கூறப்பட்டது. பின்னா் விவசாயிகள் காவிரி கரையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தொரிவித்தனா்.
பச்சை நிறப் படலதின் மீது செறிவூட்டப்பட்ட நுண்ணுயிா் கலவையைத் தெளித்து நீரை தெளிய வைத்து வந்தனா். ஆனாலும், தொடா்ந்து பச்சை நிற படலம் படா்ந்து வருகிறது. அணையின் இடதுகரையில் தேங்கும் இந்தப் படலத்தால் 16 கண் மதகுகள் துருப்பிடித்து சேதமடையக் கூடிய வாய்ப்புள்ளது. அதனால் உடனடியாக நீா்வளத் துறை அதிகாரிகள் நுண்ணுயிா் கலவையைக் கொண்டு பச்சை நிறப் படலத்தை அப்புறப்படுத்த வேண்டும்.