தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மண்டலத்தில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் உபயோகப்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெகிழிப் பொருள்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் ஆணைக்கிணங்க, மாநகராட்சி ஆணையா் உத்தரவின் பேரில் 4 மண்டலங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ. 10, 800- அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.