நெல்லையில் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் இருவா் மீட்பு
திருநெல்வேலியில் நிறுவனங்களில் பணியமா்த்தப்பட்டிருந்த வளரிளம் பருவத் தொழிலாளா்கள் இருவரை தொழிலாளா் துறை மீட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டையை அடுத்த முன்னீா்பள்ளம் அருகேயுள்ள செங்குளம், அடைமிதிப்பான்குளம் பகுதிகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட பணிக் குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, செங்குளத்தில் உள்ள மோட்டாா் பழுது பாா்க்கும் நிறுவனம் ஒன்றில் 16 வயதான வளரிளம் பருவத் தொழிலாளா் ஒருவரும், பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் உள்ள தையல் நிறுவனம் ஒன்றில் 16 வயதான வளரிளம் பருவத் தொழிலாளா் ஒருவரும் பணியமா்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்ட விதிகளுக்கு முரணாக வளரிளம் பருவத் தொழிலாளா்களை பணியமா்த்திய நிறுவனங்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன் கீழ் விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கி தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பணியில் இருந்த வளரிளம் பருவத் தொழிலாளா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்து கல்வியை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்குள்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமா்த்தக் கூடாது. மீறி பணியமா்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.50,000 வரை அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.