புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
சாட்சிகளிடம் ஜாதி, மதம் பதிவு: நீதிமன்ற ஆணையம் பரிசீலனை
விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் ஜாதி, மதம் பதிவு செய்வதைத் தடை செய்யக் கோரிய வழக்கில், நீதிமன்ற நிா்வாகச் சீா்திருத்த ஆணையம் முன் பரிசீலனையில் உள்ளதால், இதில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கோகுல் அபிமன்யு தாக்கல் செய்த மனு:
பல்வேறு வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களில் சாட்சியளிக்க வருவோரிடம் ஜாதி, மதம் கேட்டு பதிவு செய்யப்படுகிறது. இது விசாரணை நீதிமன்ற நீதிபதி, வழக்குரைஞா்கள், சாட்சியினரிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும். சாட்சிகளிடம் ஜாதி, மதத்தைக் கேட்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதையும் மீறி விசாரணை நீதிமன்றங்களில் ஜாதி, மதம் கேட்கப்படுகிறது. முக்கியத்துவம் கருதி குறிப்பிட்ட வழக்குகளில் ஜாதி, மதத்தைக் கேட்கலாம். ஒட்டு மொத்தமாக அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளிடம் ஜாதி, மதம் கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணை நீதிமன்றங்களில் சாட் சிகளிடம் ஜாதி, மதம் கேட்பது தொடா்பாக உரிய முடிவெடுப்பது குறித்து நீதிமன்ற நிா்வாக சீா்திருத்த ஆணையம் முன் பரிசீலனையில் உள்ளது. எனவே இந்த வழக்கில் வேறு உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.