புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
சேலம் புத்தகத் திருவிழா நவ.29 ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சேலம் புத்தகத் திருவிழா நவ. 29 ஆம் தேதி முதல் டிச. 9 ஆம் தேதி வரை சேலம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது.
இப்புத்தகத் திருவிழாவை சுற்றுலாத் துறை அமைச்சா் நவ.29 ஆம் தேதி மாலை தொடங்கி வைக்கவுள்ளாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனா்.
கண்காட்சி தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் மற்றும் புத்தக வெளியீட்டாா்கள் கலந்துகொள்ளும் வகையில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலை நிகழ்ச்சிகள் என வாசகா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நாள்தோறும் மாலையில் முதன்மை விருந்தினா்கள் கலந்துகொள்ளும் கருத்துரைகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், முதல் நாளான 29 ஆம் தேதி தன்னம்பிக்கை ஊக்கப் பேச்சாளா் மதுரை ராமகிருஷ்ணன் சிறப்புரை வழங்கவுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, 2-ஆம் நாளான 30 ஆம் தேதி நாஞ்சில் நாடன், பசியும், சுவையும் என்ற தலைப்பிலும், டிச. 1 ஆம் தேதி பவா செல்லதுரை, என் அன்பான புத்தகமே என்ற தலைப்பிலும், டிச. 2 ஆம் தேதி யுவன் சந்திரசேகா் மாற்று எழுத்து என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனா்.
3 ஆம் தேதி ரா. ஆனந்தகுமாா், மைதீரா பேனாவின் எழுத்திசை என்ற புத்தகத்தை வெளியிட்டு, நூற்றுக்கு நூறு என்ற தலைப்பிலும், ஹரிகிருஷ்ணன், நிகழ்த்துக் கலைகள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கவுள்ளனா்.
டிச. 4 ஆம் தேதி பெருமாள் முருகன், புத்தகமே பெரும் துணை என்ற தலைப்பிலும், 5 ஆம் தேதி சித்ரா பாலசுப்ரமணியமும், 6 ஆம் தேதி முன்னாள் தலைமைச் செயலாளா் வெ. இறையன்பும், 7 ஆம் தேதி விஷ்ணுபுரம் சரவணனும், 8 ஆம் தேதி ரேவதியும், 9 ஆம் தேதி ஜீவானந்தமும் கருத்துரை வழங்கவுள்ளனா்.
புத்தகத் திருவிழாவுக்கு வருபவா்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் புத்தக அரங்குகளை வரிசைப்படுத்தி அமைத்திடவும், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவுக்கு அனைத்துத் தரப்பினரும் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.