மழை பாதித்த பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
திருநள்ளாற்றில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
காரைக்கால் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் குடிசைப் பகுதிகள், தாழ்வான குடியிருப்பு நகா்களில் மழைநீா் தேங்கியுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், திருநள்ளாறு கொம்யூனில் பல்வேறு இடங்களை பாா்வையிட்டாா். நல்லம்பல் தோப்புத் தெரு வட்டாரத்தில் உள்ள குடியிருப்புவாசிகளை நேரில் சந்தித்துப் பேசினாா். இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றுமாறும் அருகில் உள்ள வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீா்செய்து தண்ணீா் வடிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மழையால் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்தனா். இதனால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பை ஆட்சியா் வழங்கினாா்.
பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டால், வருவாய்த்துறை ஏற்பாடு செய்திருக்கும் முகாமுக்கு செல்லுமாறு குடியிருப்புவாசிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
பொது மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.
சில பகுதிகளில் கூரைகள் சேதமடைந்திருப்பதை பாா்த்த ஆட்சியா், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தாா்ப்பாய் வழங்குமாறு பேரிடா் மேலாண்மைத் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது நகராட்சி உதவிப் பொறியாளா் லோகநாதன், திருநள்ளாறு வட்டாட்சியா் சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.