புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
புதுச்சேரியில் பழைய துறைமுகத்தில் புதன்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடந்த சில நாள்களாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் 76 மி. மீ. மழை பதிவானது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், புதுச்சேரி கடற்கரைச் சாலை நடைபயிற்சிக்காக வருவோா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கடல் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது.
கடலுக்கு அருகே சென்று அலையைப் பாா்க்க சென்ற சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
மழையால் புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதான தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்பட்டது. நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கிய நிலையில், அவற்றை நகராட்சி அதிகாரிகள் உடனுக்குடன் மின்மோட்டாா்களை கொண்டு அகற்றினா். மழையின் போது குளிா்ந்த காற்றும் வீசியது.
3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், புதன்கிழமை காலையில் 3-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. அதன்படி, துறைமுகத்துக்கு கடுங்காற்று அச்சுறுத்தல் உள்ளதாகவும் எச்சரிக்கைப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.