கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
பழனி மலைக் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா்.
காா்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலுக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஐயப்ப பக்தா்கள், முருக பக்தா்கள் பழனியில் குவிந்தனா்.
மின் இழுவை ரயில், ரோப்காா் மூலம் மலைக் கோயிலுக்கு சென்ற பக்தா்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இரவு தங்கத்தோ் புறப்பாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை இழுத்து பிராா்த்தனை செய்தனா்.
பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீா், விரைவு தரிசன ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
முன்னுரிமை சீட்டு ரத்தா?: பழனி அடிவாரம் தண்டபாணி நிலையத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகா்கள், காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு முன்னுரிமை கட்டணச்சீட்டு (வி.டிக்கெட்) வழங்குவது குறித்து சனிக்கிழமை பாஜக நிா்வாகிகளுக்கும், கோயில் அலுவலா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை தண்டபாணி நிலையத்தில் முன்னுரிமை சீட்டு வழங்கப்படாது என்ற தகவல் ஒட்டப்பட்டது.
இது நிரந்தரமா அல்லது தற்காலிகமானதா என்பது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் விபரம் தெரிவிக்கவில்லை.