கோயில் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
திருவாரூரில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கோயில் பணியாளா்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் பணியாளா்களுக்கு கட்டணமில்லா முழுஉடற் பரிசோதனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூரில் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாம் நடைபெற்றது. முகாமை, இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் குமரேசன் தொடக்கிவைத்தாா். இதில், ரத்த அழுத்தம், நீரழிவு பரிசோதனை, இருதய பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 2 நாள்கள் நடைபெற உள்ள இந்த முகாமில், கோயில் பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் என சுமாா் 1,100 பேருக்கு முழுஉடற் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்து அறநிலையத்துறை திருவாரூா் உதவி ஆணையா் சொரிமுத்து, நாகப்பட்டினம் துணை ஆணையா் ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.