உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த மு...
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு புகார் | முழு பின்னணி
சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டை அமெரிக்க வழக்கறிஞர்கள் சுமத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவின் டாப் பணக்காரரான குஜராத்தைச் சேர்ந்த கௌதம் அதானி, பிரதமர் மோடியின் நண்பர் என்பதால் பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் அசூர வளர்ச்சியைக் கண்டவர் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஏற்கெனகே அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை, செபி நடவடிக்கைகளால் ஆட்டம் கண்டுவந்த அதானி தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையால் மீண்டும் அதிர்ந்து போயிருக்கிறார். அதாவது, கௌதம் அதானியின் `அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனம் அமெரிக்காவில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,200 கோடி (265 million dollar) லஞ்சம் கொடுத்திருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இதன்மூலம், கௌதம் அதானி மட்டுமல்லாமல், அதானியின் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்டோர் அமெரிக்க முதலீட்டாளர்களின் முலதனத்தைப்(Investment) பெறுவதற்காக பொய் சொல்லி சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். கௌதம் அதானி, சாகர் அதானி, இந்திய அதிகாரிகள் உள்பட ஏழு பேர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளின் படி, ``இந்திய எரிசக்தி நிறுவனம், இந்திய எரிசக்தி நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க ரீடைனர் வணிகத்தைப் பெறுவதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும், இந்திய அரசு மின்சார விநியோக நிறுவனங்கள் சோலார் ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சதி செய்திருக்கின்றனர்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ``2021 ஜூலை மாதத்துக்கும் 2022 பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார விநியோக நிறுவனங்கள், மத்திய அரசின் சூரிய ஆற்றல் கழகத்துடன் (SECI - Solar Energy Corporation of India) பி.எஸ்.ஏ ஒப்பந்தத்தில் (POWER SALE AGREEMENT - FOR SALE OF SOLAR POWER) கையெழுத்திட்டு இணைந்தன" என்றும் கூறியிருக்கிறது. அதாவது, இந்தியாவில் தான் லஞ்சம் கொடுத்து பெற்ற ஒப்பந்தங்களை வைத்து, அமெரிக்க முதலீட்டார்களை அதானி நிறுவனம் ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் அமெரிக்க வழக்கறிஞர்களின் முதன்மைக் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த குற்றச்சாட்டு அறிக்கை பூதாகரமாகக் கிளம்பியதும், அதானி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்கள் கடுமையாக சரிவைச் சந்திருக்கின்றன.
இதுகுறித்து விமர்சித்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ``அமெரிக்காவில் ஒப்பந்தம் பெறுவதற்கு அதானி நிறுவனம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கிய போது, விசாரணையை நிறுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. தற்போது அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது விசித்திரமானது...அதானி மற்றும் அவர் தொடர்பான ஊழல்களை விசாரிப்பது பற்றி காங்கிரஸ் தொடர்ந்து பேசி வருகிறது, ஆனால் நரேந்திர மோடி அதானியைக் காப்பாற்ற தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார். காரணம் தெளிவாகத் தெரிகிறது - அதானியிடம் விசாரணை நடத்தப்பட்டால், நரேந்திர மோடியுடன் உள்ள ஒவ்வொரு இணைப்பும் வெளிவரும்!" எனத் தெரிவித்திருக்கிறது.
அதேபோல தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, ``அதானி குழுமத்தின் மீது ரூ.2200 கோடி ஊழல் குற்றச்சாட்டு, பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதால், அமெரிக்காவில் உள்ள கிழக்கு நியுயார்க் நீதி மன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாவம் பாஜகவினர்! என்ன சொல்லி முட்டுக் கொடுக்க போகின்றனர். பாவம் அதானி அவரிடம் கொஞ்சப் பணம் தான் இருக்கிறது, கருணையோடு அணுகுங்கள் என யாருடைய மனைவி கோரிக்கை விடுப்பாரோ?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து அ.தி.மு.க ஐ.டி.விங் நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார், ``அதானி குழுமம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஜூலை 2021 - பிப்ரவரி 2022 காலகட்டத்தில் தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் தமிழக அரசு ஒரு வழக்கு பதிவு செய்து விசாரிக்க கூடாது? மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏன் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தநிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களை அதானி மீறியிருக்கிறார் என்பது இப்போது தெளிவாக அமெரிக்காவிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2000 கோடி ஊழல் மற்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தாலும், அதானி ஏன் இந்த நாட்டில் சுதந்திரமாகத் திரிகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை நாங்கள் பலமுறை எழுப்பி இருக்கிறோம். பிரதமர் மோடிதான் அதானியை பாதுகாக்கிறார். அவருடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டுவருகிறார்" எனக் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார். இதனிடையே அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...