Delhi Air Pollution: டெல்லியில் உச்சத்தில் காற்று மாசு; அரசு அலுவலகங்கள், வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
இந்திய தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறது. இன்று காலையில் டெல்லியில் AQI லெவல் 420. AQI லெவல் 100-ஐ தாண்டினாலே சுவாசிக்க உகந்த காற்று அல்ல என்று கூறப்படும் நிலையில், 400+ என்பது டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டின் தீவிரத்தை உணர்த்துகிறது. கடும் பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்து டெல்லியை மூச்சுத் திணறடிக்கிறது.
டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணம். இது தவிர வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல காரணிகளும் இருக்கின்றன.
டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு காரணமாக, போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாசுபாட்டைக் குறைக்க, டெல்லியில் செயல்படும் அரசு அலுவலகங்களின் வேலை நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது குறித்து, முதல்வர் அதிஷி எக்ஸ் தள பதிவில், `டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 08:30 மணி முதல் மாலை 5 மணி வரை, மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 05:30 மணி வரை, டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை செயல்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதோடு, காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM), டெல்லியில் பதிவான மோசமான காற்று மாசுபாட்டால், கட்டுமானம் மற்றும் வாகன உமிழ்வால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த GRAP 3 (Graded Response Action Plan) நடவடிக்கைகளை விதித்தது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ``BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவும், தில்லி போக்குவரத்துக் கழகத்தால் 106 கூடுதல் கிளஸ்டர் பேருந்துகள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில்கள் 60 கூடுதல் பயணங்களை மேற்கொள்ளும். மேலும், இ-பஸ்கள், CNG வாகனங்கள் தவிர மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. செயற்கை மழை போன்ற அவசர நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படும்." என்று கூறியிருக்கிறார். அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைனிலேயே வகுப்பெடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.