எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
'ஆன்மிக நிகழ்ச்சி; வெளியான ஆடியோவால் சர்ச்சை’ - சென்னை மீனாட்சி கல்லூரியில் நடந்தது என்ன?
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் சிருங்கேரி பீடத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாணவிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மீறி வராதவர்கள் மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டுமெனவும் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாக, அதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் செல்வாவிடம் பேசினோம். ''பள்ளி, கல்லூரிகள்ல ஆன்மிகம்ங்கிற பெயரில் மதம் சார்ந்த விஷயங்களைக் கடைபிடிக்கச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தறதுங்கிறது நம்முடைய அரசியலமைப்புக்கு எதிரானது. படிக்கிறதுக்குன்னு சிலபஸ் பல்கலைக்கழங்களால் தரப்படுது. அதைத்தாண்டி மத்த விஷயங்களை, அதுவும் குறிப்பா மதம் சார்ந்த விஷயங்களை மாணவர்களின் விருப்பத்துக்கு மீறித் திணிக்கறதை ஏத்துக்கவே முடியாது.
அதுவும் இங்க நடந்த சம்பவம் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு. அந்த பீடாதிபதி கலந்துக்கிற நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துக்கிடணும்; அட்டெனன்ஸ் எடுக்கப்படும், மீறி வராதவங்களுக்கு தேர்வு ரிசல்ட் பாதிக்கப்படும்னு பேராசிரியர் மிரட்டுறாங்க.
அந்த நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தே ஆகணும்னா கல்லூரியின் விடுமுறை தினங்கள்ல நடத்தி, விருப்பபட்டவங்களைக் கூட்டி கூட்டம் காட்ட வேண்டிதானே? மாணவர்களை வற்புறுத்தி வரச் சொல்றது எந்த வகையில நியாயம்? அதுலயும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை வைத்து மிரட்டுவதென்பது மிகப்பெரிய குற்றம்.
இந்திய மாணவர் சங்கம் போராட்டம் பண்ணினப்ப, கல்லூரி தரப்புல இருந்து விளக்கம் தர மறுத்துட்டாங்க. அதனால பல்கலைக்கழகமோ அல்லது உயர் கல்வித்துறையே இந்த விஷயத்தில் தலையிட்டு கல்லூரி நிர்வாகமா அல்லது குறிப்பிட்ட சில பேராசிரியர்களா யார் இந்த நிகழ்ச்சிக்குப் பொறுப்புனு விசாரித்து அவங்க மேல தீவிர நடவடிக்கை எடுக்கணும்கிறதுதான் எங்க கோரிக்கை. அப்படி நடந்தா மட்டுமே இனி வரும் காலங்கள்ல இப்படியொரு நிகழ்வு நடக்காது.
என் தனிப்பட்ட கருத்து என்னன்னா, 'இப்ப சமீபத்துலதான் சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுனு ஒருத்தர் கண்டதையும் உளறி கடைசியில கைதானது வரை நடந்தது. அது நடந்து ரெண்டு மாசம் கூட ஆகியிருக்காது. அதுக்குள்ள திரும்பவும் மதம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்யறது மட்டுமில்லாம, மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறாங்கன்னா, எவ்வளவு தைரியம் பாருங்க'” என்கிறார் செல்வா.
கல்லூரி தரப்பை நாம் தொடர்பு கொண்ட போது, அவர்கள் இந்த விவகாரம் குறித்து பேச மறுத்து விட்டனர்.
கல்லூரி தொடர்புடைய சிலரிடம் பேசினோம். 'கல்லூரிக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கோயிலின் கும்பாபிஷேகத்துல சிருங்கேரி இளைய பீடாதிபதி கலந்துகிட்டார். அந்த நிகழ்ச்சி மட்டுமில்லாம மேலும் சில நிகழ்ச்சிகளும் அவருடைய சென்னைப் பயணத்தில் திட்டமிடப் பட்டிருந்தது. கல்லூரியிலேயே ரெண்டு நாள் நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருக்காங்க. அவருடைய சென்னை விஜயத்துக்கு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையுமே தேவையான உதவிகளைச் செய்து தந்தாங்க.
கல்லூரியில நடந்த நிகழ்ச்சி முன்கூட்டியே திட்டமிட்டதுதான். ஆனா மாணவிகளைக் கலந்துக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது நிர்வாகத்துக்குத் தெரிஞ்சு நடந்ததா அல்லது குறிப்பிட்ட பேராசிரியரின் தனிப்பட்ட ஆர்வத்துல நடந்ததா தெரியலை'' என்கிறார்கள் இவர்கள். இந்த விவகாரத்தில் மீனாட்சி கல்லூரி சார்பில் விளக்கம் வெளியிட்டால், அதனை நாம் உரிய பரிசீலனைக்குப்பின் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...