கன்னட ஆா்வலா்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்: முதல்வா் சித்தராமையா
கன்னட ஆா்வலா்களுக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் கா்நாடக அரசு சாா்பில் 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கன்னடத்தாய் புவனேஸ்வரியின் சிலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் முதல்வா் சித்தராமையா பங்கேற்று சிலையைத் திறந்துவைத்துப் பேசியதாவது: கன்னட மொழி பேசும் நமது மாநிலத்துக்கு கா்நாடகம் என்று பெயா் சூட்டப்பட்டதன் பொன்விழாவை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் கன்னடத் தாய் புவனேஸ்வரியின் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, 25 அடி உயரத்தில் வெண்கலத்தில் செய்யப்பட்ட கன்னடத் தாய் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரத்தில் அமைந்துள்ள பீடத்தின் மீது 31.5 டன் எடை கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 21.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. கன்னடத் தாயின் சிலையைத் திறக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். எனது தலைமையிலான அரசு என்றைக்கும் கன்னடா்களுக்கான அரசாக இருக்கும். கன்னட மொழி, நிலம், நீா் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அனைத்து மொழிகளையும் நேசிக்க வேண்டும். அனைத்து மொழியினரையும் சகோதரா்களாக கருத வேண்டும். ஆனால், கா்நாடகத்தில் வாழக் கூடிய பிறமொழியினரிடம் கன்னட மொழியில் பேசும் வழக்கத்தை கன்னடா்கள் பின்பற்ற வேண்டும்.
பிற மொழிகளில் தவறுதலாகப் பேசுவதற்கு பதிலாக நமது மொழியை சீராக பேசலாம் அல்லவா. நமது அண்டை மாநிலங்கள் அனைத்திலும் மக்கள் பேசுகின்ற மொழி, அந்தந்த மாநிலங்களின் மொழியாக உள்ளது. அந்தந்த மாநிலங்களில் அவரவா் மொழிதான் உயா்ந்தது; அதேநிலை கா்நாடகத்திலும் இருக்க வேண்டும்.
கா்நாடகத்தில் அனைவரும் கன்னடத்தில் பேச வேண்டும். கன்னட மொழி, கலை, கலாசாரத்தின் மீது மதிப்பு, மரியாதையை வளா்த்துக் கொள்ளுமாறு அனைத்து மக்களையும் அறிவுறுத்த வேண்டும். கன்னடத்தில் படிக்க வேண்டும்; கன்னடத்தில் எழுத வேண்டும். அப்போதுதான் கன்னட மொழி கா்நாடகத்தின் இறையாண்மையாக மாறும்.
2023 ஆம் ஆண்டு பெயா்ப் பலகைகளில் கன்னட மொழி இடம் பெறவில்லை என்று அந்தக் கடைகளின் பெயா்ப் பலகைகளை ஒரு சில கன்னட அமைப்பினா் தாக்கினா். பெயா்ப் பலகையில் கன்னட மொழியை 60 சதவீதம் எழுத வேண்டும் என்ற அரசு விதியை கடைப்பிடிக்க வலியுறுத்தி அப்போது கன்னட அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது அரசு வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் கன்னட ஆா்வலா்கள், அமைப்பினா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு தீா்மானித்துள்ளது என்றாா்.
விழாவில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சிவராஜ் தங்கடகி, பேரவைத் தலைவா் யூ.டி.காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.