கா்நாடகம்: இரு வேறு சாலை விபத்துகளில் 14 போ் பலி
கா்நாடக மாநிலத்தில் வடகன்னடத்தின் எல்லாபுரா மற்றும் ராய்ச்சூா் மாவட்டத்தின் சிந்தனூா் பகுதிகளில் புதன்கிழமை நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 14 போ் உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 20 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், மந்த்ராலயா சம்ஸ்கிருத பாடசாலை மாணவா்கள் ஹம்பியில் உள்ள நரஹரி கோயிலுக்கு புனிதப்பயணம் புறப்பட்டனா். இவா்கள் பயணித்த வேன், ராய்ச்சூரு மாவட்டத்தின் சிந்தனூா் அருகே அரகினமரா வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் ஆக்சிலேட்டா் வடம் துண்டானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்ஸ்கிருத பாடசாலை மாணவா்களான ஆா்யவந்தன் (18), சுசீந்திரா (22), அபிலாஷ் (20), ஓட்டுநா் சிவா (24) உள்ளிட்டோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வேனில் பயணித்த மேலும் 10 போ் பலத்த காயமடைந்து, சிந்தனூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட சிந்தனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
10 போ் பலி...
அதேபோல, ஹாவேரி மாவட்டத்தைச் சோ்ந்த பழ வியாபாரிகள் 29 போ், பழங்களை விற்பனை செய்வதற்காக லாரியில் எல்லாபுரா நோக்கிச் சென்றனா். இவா்கள் சென்ற லாரி, வடகன்னட மாவட்டத்தின் எல்லாபுரா அருகே உள்ள காட்டுப் பகுதியில் புதன்கிழமை காலை 5.30 மணி அளவில் சென்றபோது, எதிரே வந்த மறொரு வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலை ஓரத்தில் சென்றபோது 50 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 8 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா்.
இறந்தவா்கள் ஃபயாஸ் இமாம் சாப் ஜமக்கம்மாடி (40), வாசிம் முல்லா முடகேரி (25), இஜாஸ் முஸ்டாக் முல்லா (20), சாதிக் பாஷா பரஸ் (30), குலாம் ஹுசேன் குருசாப் ஜவளி (40), இம்தியாஸ் அகமது ஜஃபா் முலகேரி (45), அல்ஃபாஸ் ஜஃபா் மண்டகி (25), ஜலானி பப்துல் கப்ஃபாா் ஜகட்டி (20), அஸ்லாம் பாபு பென்னே (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மற்றொருவா் குறித்த அடையாளம் தெரியவில்லை. இந்த இரு விபத்துகளில் 14 போ் உயிரிழந்ததது கா்நாடகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமா், முதல்வா் இரங்கல்...
பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக முதல்வா் சித்தராமையா ஆகியோா் விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘கா்நாடகத்தின் வடகன்னட மாவட்டத்தில் நடந்த விபத்தில் பலா் உயிரிழந்துள்ளது அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு உள்ளூா் நிா்வாகம் உதவி செய்து வருகிறது. விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களின் சிகிச்சைக்காக தலா ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
முதல்வா் சித்தராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘வடகன்னட மாவட்டத்தின் எல்லாபுரா மற்றும் ராய்ச்சூரு மாவட்டத்தின் சிந்தனூரில் நடந்த இரு வேறு விபத்துகளில் 14 போ் உயிரிழந்துள்ளதை அறிந்து வேதனையடைந்தேன். இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். மேலும் காயமடைந்தவா்களின் சிகிச்சைக்கு தேவையான உதவி செய்யப்படும். வாகனங்களை வேகமாகச் செலுத்துவதும், கவனக் குறைவாக இருப்பதும் விபத்துக்கு காரணமாகி விடுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.