Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்!
காலையில் வானம் சில நாள் சிறு தூறல் போடுகிறது. கூடவே குளிரும் தாங்க முடியவில்லை. இந்தப் பனிக்காலம் சளி, இருமல், காய்ச்சல் என்று அனைத்து வயதினரையும் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வயதானவர்களும், குழந்தைகளும் நெஞ்சு சளியுடன் இருமிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் தீர்வு என்று சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.
பொதுவாக இந்த பருவ காலங்களில் வைரஸ் தொற்றுகள் அதிகமாக இருக்கும். சுவாசப் பாதை மூலமாகப் பரவும் சளி, இருமல் மற்றும் தும்மல் மூலமாகத் தொற்றுகள் எளிதில் பரவுகின்றன. பொது இடங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் இருமுவது, தும்முவது மூலமாக வைரஸ் தொற்றுகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. இதைப் பருவகால வைரஸ் காய்ச்சல் ( seasonal virus fever) என்று கூறுவார்கள். வீட்டில் ஒரு நபருக்கு வந்தால் மற்ற அனைவருக்கும் வந்தே தீரும். இது குழந்தைகளிலிருந்து பெரியவர் முதல் யாரையும் விடுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் வைரஸ்கள் தனக்குள் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு புதிதாக வருவதால் இதற்கு முன் இந்த தொற்று வந்திருந்தாலும் அதற்கான எதிர்ப்புச்சக்தி நம் உடம்பில் இருக்காது. புதிதாகத் தொற்று வருவது போன்றுதான் இருக்கும்.
பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கும் பெரியவர்களுக்கும் வைரஸ் தொற்றுகள் ஒரு வாரதிற்குள் குணமடைந்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு அப்படி இல்லை. குழந்தைகள், முக்கியமாக ஒரு வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள் அதிலும் எடை குறைவாக உள்ள, குறை மாதத்தில் பிறந்த மற்றும் இதய நோய் இருக்கும் குழந்தைகளுக்குத் தொற்றுகள் தீவிமாக வெளிப்படும். அதேபோல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் இருக்கும் முதியவர்களுக்கும் தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். இதயப்பிரச்னை இருப்பவர்கள் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இந்தப் பருவத்தில் அதிகாலையிலும் இரவிலும் கூடுமானவரை வெளியே அதிகம் போகாமல் இருப்பது நல்லது. குழந்தைகளையும் இந்த நேரத்தில் வெளியே அழைத்து செல்லாமல் இருப்பதே பாதுகாப்பு. காதுகளுக்குள் புகும் குளிர்ந்த காற்றால், காதிலிருந்து முகத்துக்குச் செல்லும் ஏழாவது நரம்பு (Seventh nerve) பாதிக்கப்பட்டு 'முக வாதம்’ வரும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக, குளிர் காலத்தில் அனைவரும் காதுகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.
சளி, இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் தங்களை ஒரு வாரமாவது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். தொற்று ஏற்பட்ட சமயத்தில் பயணங்களை தவிர்ப்பதன் மூலம் தொற்று தீவிரமடையாமல் தவிர்க்கலாம். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் மூலம் தொற்று பரவாமல் தவிர்க்க முடியும்.
சளி, காய்ச்சலின் போது உடல் உஷ்ணமாக இருப்பதால் நீர்ச் சத்துக்குறைபாடு ஏற்படும். அதனால், கஞ்சி, ரசம் சாதம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாதுளை போன்ற பழச்சாறுகளை அருந்தலாம். இட்லி போன்ற அவித்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல், சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, பால் குடிக்காமல் இருப்பது என இவை அனைத்தும் வைரஸ் தொற்றின் அறிகுறிகள். இதில் ஏதேனும் ஒன்றிரண்டு அறிகுறிகள் இருந்தாலும் உடனடியான மருத்துவரை நாடுவதே பாதுகாப்பு. மற்றபடி பனிக்காலத்தில் வருகிற சளி, இருமல், காய்ச்சலுக்குப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...