Health: சிறுபீளை, ஆவாரை, மஞ்சள், இஞ்சி... பொங்கல் பண்டிகையில் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்!
பொங்கல் நேரத்தில் நாம் உண்கிற, பயன்படுத்துகிற அத்தனை பொருள்களும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அது தெரியாமலே பலரும் காலங்காலமாக அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பொங்கலுக்குப் பயன்படும் பலவித மூலிகைகளின் மருத்துவப் பலன்களை விவரிக்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார்..
''சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, பேய் மிரட்டி இலை அல்லது பெரும் தும்பை, ஆவாரை ஆகியவற்றைக் கொத்தாகக் கட்டி, நிலை வாசலில் செருகுவார்கள்.
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்து விடும். இதனால், சிறுநீரகத்தில் உருவாகும் சிறு சிறு கற்களைக் கரைக்கும் தன்மை சிறுபீளைக்கு உண்டு. வேப்பிலையும் மாவிலையும் கிருமிநாசினிகள். பெரும் தும்பை தலைபாரம், நீர்க்கோவை, சளி என குளிர்காலம் தொடர்பான பிரச்னைகளைச் சரி செய்யும். ஆவாரைக்கு சருமப் பிரச்னைகளை குணப்படுத்துவது முதல், ரத்தச் சுத்திகரிப்பு வரை பல குணங்கள் இருக்கின்றன.
சில கிராமங்களில் மாடுகளுக்குப் பிரண்டை மாலை அணிவிப்பார்கள். சுண்ணாம்புச்சத்தின் அவசியத்தை உணர்த்துவதற்கானது இது.
மஞ்சள், புற்றைத் தடுக்கும்; இஞ்சி உடலை உறுதியாக்கும் காயகற்ப மூலிகைகளில் ஒன்று.
பல காய்க் குழம்பில் சேர்க்கப்படுகிற மொச்சையில் புரதம் அதிகம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம். மஞ்சள் பூசணியில் துத்தநாகச் சத்து அதிகம்.
மாவுச்சத்து, புரதம், கொழுப்பு மூன்றும் சேர்ந்த சமச்சீர் உணவு, பொங்கல். இதில் சேர்க்கப்படும் வெல்லம் நாவின் உமிழ்நீர் சுரப்பியிலிருந்து வயிற்றுக்குள் இருக்கிற செரிமான என்சைம் வரை அனைத்தையும் தூண்டிவிடும்.
தாது உப்புகள் நிறைந்த கரும்பு, பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் கொடுக்கக்கூடியது.''
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...